திருகோணமலையில் புத்தர் சிலை: கொந்தளித்த தென்னிந்திய இயக்குனர்
கடந்த காலங்களில் இனவாத ரீதியாக செயற்பட்ட ஆட்சியாளர்களான ராஜபக்ச, ரணில் ஆகியோரின் பாதையிலா அநுரகுமார திசாநாயக்க நீங்களும் பயணிக்கின்றீர்கள் என தென்னிந்திய பிரபல இயக்குனரும் தமிழ்ப் பேரரசு கட்சியின் நிறுவனருமாகிய வ.கௌதமன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் அறிக்கையொன்று வெளியிட்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “நீங்கள் இனவாதம் அற்ற ஒருவர் என நம்பி உங்களுடைய தேசிய மக்கள் சக்திக்கு எங்கள் தமிழர்கள் பெருவாரியான வாக்குகளை அளித்திருந்ததை கடந்த பொதுத்தேர்தலில் நாங்கள் கண்கூடாக பார்த்திருந்தோம்.
கடந்த ஆட்சியாளர்கள்
இருப்பினும், நேற்றையதினம் திருகோணமலையில் இடம்பெற்ற சம்பவத்தை பார்க்கின்ற போது கடந்த கால ஆட்சியாளர்களின் வழியிலா அநுரகுமார திசாநாயக்கவும் என்ற கசப்பான கேள்வி எழுகின்றது.

நேற்றையதினம் தமிழர்களின் தலைநகரான திருகோணமலை மண்ணில் சட்டவிரோதமாக வைக்க முயற்சித்த புத்தர் சிலையை அகற்றுமாறு கோரி மக்கள் எதிர்ப்பு வெளியிட்டபோது அங்கு பதற்றம் ஏற்பட்ட நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால அந்த புத்தர் சிலையை அங்கிருந்து எடுத்து செல்லுமாறு கூறியபோது நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம்.
இருப்பினும், அந்த மகிழ்ச்சி சில மணிநேரமே நீடித்தது என்பது வேடிக்கையாகவும், வேதனையாகவும் உள்ளது.
புத்தர் சிலை
சட்டவிரோத புத்தர் சிலையை அகற்ற சொல்லிய உங்களது அரசாங்கமே மீளவும் அங்கே அந்த சிலையை வைக்குமாறு கூறியது.

அப்படியானால் உங்களது கட்சி மீது எங்கள் மக்கள் வைத்த நம்பிக்கை வீண்போனதா ? மக்களின் நாயகன் என உங்களை போற்றிய எம்மக்களின் கனவு மண்ணோடு மண்ணானதா ? ஈழ தேசத்தில் பூர்வீகமாக வாழும் தமிழ் மக்களின் நெஞ்சங்கள் தொடர்ந்தும் வெந்தழலில்தான் வேக வேண்டுமா ?
அடித்தவன் தொடர்ந்து அடிக்கும் போது ஏற்படுகின்ற வலியை விட அணைப்பதுபோல் அணைத்துவிட்டு அதே கரங்களால் அடிக்கின்ற வலி என்பது சொல்லில் அடங்காத ஒரு பெருவலி, இலங்கையின் ஜனாதிபதியாக இருக்கின்ற தாங்கள் இதனை உணரவில்லையா ?
உறவுகளின் உணர்வு
எமது தொப்புள் கொடி உறவுகளின் உணர்வுகளை புரிந்த ஒரு ஜனாதிபதி ஆட்சிக்கு வந்துள்ளார் என தமிழகத்தில் இருந்து நாங்கள் சற்று ஆறுதலடைந்ததுடன் கொஞ்சம் நிம்மதியாகவும் மூச்சு விட்டோம்.
ஒரு இரவு தூங்கி காலையில் எழும்போது அந்த நிம்மதி மண்ணோடு மண்ணாகும் வகையிலான இச்செய்தி எங்கள் செவிகளுக்கு கிடைத்த போது அந்த சோகக் கதையை இனி நாங்கள் யாரிடம் சொல்லியழ ? உங்கள் மீது நாங்கள் வைத்த நம்பிக்கையை நோவதா?

அல்லது உங்களை நம்பி வாக்களித்த எம் மக்களை நோவதா? இதனை நாங்கள் எப்படி பார்க்க வேண்டும் என தயவுசெய்து நீங்களே கூறுங்கள்.
இனியும் எதுவும் கெட்டுப் போகவில்லை, அந்த புத்தர் சிலை விவகாரத்துக்கு தமிழ் மக்களின் விருப்பப்படியான தீர்வை கொடுங்கள், அந்த சிலையை அகற்றுமாறு உத்தரவிட்டு உங்களின் அரசியல் அறத்தை காப்பாற்றுங்கள், அதன் மூலமாவது புண்பட்ட எங்கள் நெஞ்சு ஓரளவேனும் ஆறுதலடையும்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்தள விமான நிலையத்தை குறி வைக்கும் அமெரிக்கா 4 நாட்கள் முன்