போதைப்பொருள் வலையமைப்பை தோற்கடிக்கும் திட்டம் நாடு முழுவதும் ஆரம்பம்
போதைப்பொருள் அனர்த்தத்தை தோற்கடிக்கும் நோக்கில் “முழு நாடுமே ஒன்றாக" எனும் தேசிய செயற்பாட்டுத் திட்டம் இன்று (30.10.2025) மட்டக்களப்பிலும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் “க்ளீன் சிறிலங்கா” வேலைத் திட்டத்திற்கமைய குறித்த தேசிய செயற்பாட்டுத் திட்டம் ஜனாதிபதி தலைமையில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்ட நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான நிகழ்வும் இவ்வாறு இடம்பெற்றது.
அதன்படி, இன்று (30.10.2025) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
போதைப்பொருள் வலையமைப்பு
போதைப்பொருள் வலையமைப்பை தோற்கடிக்கும் “முழு நாடுமே ஒன்றாக" தேசிய செயற்பாட்டின் பிரதான அங்குரார்ப்பண நிகழ்வு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அதன் ஓர் அங்கமாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது, ஜனாதிபதியின் விசேட உரை நிகழ்நிலை ஊடாக காண்பிக்கப்பட்டதுடன் போதைப் பொருளற்ற தேசத்தை உருவாக்குவோம் எனும் தொனிப்பொருளில் உத்தியோகத்தர்களினால் சத்தியப்பிரமாக நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், காவல் திணைக்கள உயரதிகாரிகள், முப்படை அதிகாரிகள், அரச திணைக்களங்களின் உயரதிகாரிகள், மாவட்ட செயலக உயரதிகாரிகள் கலந்துக்கொண்டனர்.
யாழ்ப்பாணம்
மேலும், விஷ போதைப்பொருள் அச்சுறுத்தலை முழுமையாக ஒழிப்பதற்காக அரசாங்கத்தின் புதிய திட்டமான “முழு நாடுமே ஒன்றாக - தேசிய செயற்பாடு” இன்றைய தினம் வியாழக்கிழமை நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதனை முன்னிட்டு , யாழ்ப்பாண தலைமை காவல் நிலைய அதிகாரிகளின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் போதைப்பொருளை எதிரான விழிப்புணர்வு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
மாணவர்கள் மத்தியில் போதைப்பொருளின் தாக்கம் எவ்வாறு சமூக மத்தியில் ஏற்படுத்தப்பட்டுகிறது என்பது தொடர்பில் விழிப்புணர்வு கருத்துக்கள் முன் வைக்கப்பட்டதுடன் மாணவர்கள் மத்தியில் பாடசாலை அதிபர் , உயர் அதிகாரிகள் கருத்துரைகள் வழங்கினார்கள்.
செய்தி - தீபன்
திருகோணமலை
ஜனாதிபதி செயலகத்தின் Clean Sri Lanka திட்டத்தின் கீழ், நாட்டின் அனைத்து அரச பாடசாலைகளையும் மையமாகக் கொண்டு செயல்படுத்தப்படும் NEXTGEN LEADERS திட்டத்தின் கிழக்கு மாகாண ஆரம்ப நிகழ்வு, கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகரவின் தலைமையில், திருகோணமலை இந்துக் கல்லூரியில் இன்று (30) நடைபெற்றது.
"Clean Sri Lanka" திட்டத்தின் மூன்று முக்கிய தூண்களில் ஒன்றாகக் கருதப்படும் நெறிமுறைகள் துறையின் மூலம் சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்தும் எதிர்பார்ப்புடன் பாடசாலை மாணவர்களை இலக்காகக் கொண்டு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.


செய்தி - ஹஸ்பர்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



