எத்தடை வந்தாலும் போராட்டம் நடத்தியே தீருவோம்! எதிரணி சூளுரை (படங்கள்)
எவ்வித தடைகள் வந்தாலும் எதிர்வரும் 16ஆம் திகதி கொழும்பு ஹைட் பார்க்கில் நடத்தப்படவுள்ள அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை , நடத்தப் போவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார (Ranjith Madduma Bandara) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் - எதுல்கோட்டையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
எமது ஆர்ப்பாட்டத்தை தடுப்பதற்காக சுகாதாரப் பணிப்பாளர் ஊடாக செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன் ஒருகட்டமாக சுகாதாரப் பணிப்பாளர் வர்த்தமானியை வெளியிட்டுள்ளார். எனினும் முகக்கவசங்களை அணிந்து கொண்டு இடைவெளிகளை கடைப்பிடிப்பதன் மூலம் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படும்.
அரசாங்கம் எங்களை அடக்கவே நினைக்கிறது. இன்று இந்த நாட்டில் எங்கும் போராட்டங்கள் நடக்கின்றன. ஆயிரக் கணக்கானவர்களைக் கூட்டி, ஒரு மண்டபத்தில் கட்சி ஆண்டு விழாவை நடத்தும் போது, இந்தச் சட்டமோ, சுகாதார ஒழுங்குகளோ தேவைப்படாத போது ஐக்கிய மக்கள் சக்திக்கு மாத்திரம் ஏன் இந்த சட்டம் என்று காவல்துறையிடமும் சுகாதார துறையினரிடமும் வினவுகிறோம்.
இன்று நாடளாவிய ரீதியாக மக்கள் அலை சஜித் பிரேமதாசவையும் ஐக்கிய மக்கள் சக்தியையும் நோக்கி திரும்பும் போது அதற்கு தலைமை வழங்கும் பொறுப்பு எங்களுக்கு உண்டு. எதிர்வரும் 16ஆம் திகதி கொழும்பு ஹைட் பார்க் பகுதியில் அரச எதிர்ப்புப் போராட்டம் இடம்பெறும்.
பொய்யான சட்டங்களுக்கும், பொய்யான அச்சுறுத்தல்களுக்கும் நாங்கள் அஞ்சமாட்டோம் என்பதை அரசாங்கத்துக்குச் சொல்லிக் கொள்ளுகிறோம். அரச தலைவர் தனது ஆட்சி நல்லதல்ல என்றால் மாற்று புதிய அணியை கொண்டு வருமாறு கூறுகிறார்.
எங்களுடைய ஆரம்ப ஏற்பாடே 16 ஆம் திகதி ஆர்ப்பாட்டமாகும்.16 ஆம் திகதி அந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். ஆர்ப்பாட்டத்தை நடத்தியே தீருவோம் நேற்றைய வரவுசெலவுத்திட்டம் இந்த நாட்டில் பொருட்களின் விலையேற்றத்தினால் அதிகருத்துள்ள வாழ்க்கைச் செலவு அதிகரிப்பை குறைப்பதற்கான எந்தப் பதிலும் இல்லை.
வரவு செலவுத் திட்டத்தில் அப்படி ஒன்றே இல்லை. இது விவசாயிகளை வெறுமனே ஏமாற்றும் செயலாகும். துணை மதிப்பீடுகளை கொண்டு வரமாட்டோம் என நிதி அமைச்சர் கூறுகிறார்.
இது விவசாயிகள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்று அர்த்தம். ஒய்வூதிய வயதை அதிகரித்தது அரச ஊழியர்களின் மீதுள்ள இரக்கத்தில் அல்ல. அவர்களுக்கான கொடுப்பனவுகளை செலுத்த பணமில்லை என்பதுவே உண்மை.
பணமில்லாத காரணத்தாலும் அரச ஊழியர் ஓய்வு பெறும்போது உதவித்தொகையை செலுத்த முடியாததாலும்,பொதுப்பணித் துறைக்கு வழங்கும் வருங்கால வைப்பு நிதியில் இருந்து கொஞ்சம் பணத்தைப் பெறுவதற்காக அரச ஊழியருக்கு இவ்வாறு செய்துள்ளார்கள் என்றும் இது வெற்று ஏமாற்று என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

