விண்ணப்பப் படிவங்கள் மும்மொழிகளிலும் வெளியிடப்படும் : அமைச்சர் அறிவிப்பு
இலங்கையிலுள்ள கிராமசேவகர் பிரிவுகளில், மக்களுக்கு மிகவும் அவசியமான விண்ணப்பப் படிவங்களை மும்மொழிகளிலும் வெளியிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார (Harshana Nanayakkara) தெரிவித்துள்ளார்.
அதன்படி, மக்களுக்கு தேவையான 22 விண்ணப்பங்கள் தற்போது மும்மொழிகளிலும் பிரசுரிப்பதற்கு தயார்நிலையில் உள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட போதே அமைச்சர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.
அரசதுறையின் படிவங்கள்
அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் மாதத்தில் இருந்து அரசதுறையின் அனைத்துப் படிவங்களையும் பொதுமக்கள், மூன்று மொழிகளிலும் பெற்றுக்கொள்ள முடியும்.
கிராமசேவகர் பிரிவில் மக்களுக்கு மிகவும், அத்தியாவசியமான சில விண்ணப்பங்கள் இருக்கின்றன. அவை பல இடங்களில் சிங்கள மொழியில் மாத்திரமே இருப்பதை எமது அமைச்சு அடையாளம் கண்டுள்ளது.

வடக்கில் அவை தமிழ் மொழியில் கிடைத்தாலும், ஏனைய மாவட்டங்களில் தமிழ் மக்களுக்கு அவை தமிழ் மொழியில் கிடைப்பதில்லை.
எனவே, அவர்களின் நலன்கருதி, மக்களுக்கு மிகவும் அத்தியாவசியமான 22 விண்ணப்பங்கள் தற்போது மும்மொழிகளிலும் தயார் செய்யப்பட்டுள்ளதுடன் அவற்றை விரைவில் மக்களுக்கு வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
எனினும், அதற்கு முன்னர் அந்த விண்ணப்பங்களை இந்த மாத இறுதி அல்லது அடுத்த மாத ஆரம்பத்தில் இணையத்தளத்தில் வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளோம்” என அமைச்சர் தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
திருமலை ஐந்து மாணவர் படுகொலை… நீதியின்றி 20 ஆண்டுகள்… 15 மணி நேரம் முன்