மன்னார் சுடுகாடாக மாறும்..!அர்ச்சுனா பகிரங்க எச்சரிக்கை
காற்றாலைகளை உருவாக்குவதன் மூலம் மன்னார் பிரதேசம் ஒரு சுடுகாடாக மாறுமே அன்றி அங்கு எந்தவொரு அபிவிருத்தியும் ஏற்படாது என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் பணிப்புரை
இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “மன்னாரில் காற்றாலை அமைக்கும் நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்க ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று பணிப்புரை விடுத்திருந்தார்.
இவ்விடயம் தொடர்பில் ஏற்கனவே மன்னார் மக்கள் ஜனாதிபதியை சந்தித்து பேசிய போது, மக்களுடன் கலந்துரையாடி தீர்மானம் எட்டப்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் கலந்துரையாடலில் ஈடுபட சென்றிருந்த அமைச்சரையும் மன்னார் மக்கள் தடுத்திருந்தனர். இவ்வாறான ஒரு சூழலில் நேற்றைய தினம் மீண்டும் காற்றாலை அமைக்கும் நடவடிக்கைகளை ஆரம்பிக்க ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
வடக்கு மாகாணத்தில் அபிவிருத்திகளை மேற்கொள்ளப் போவதாக அரசாங்கம் தெரிவித்திருந்தது.
அரசாங்கத்தின் சூழ்ச்சி
இவ்வாறு காற்றாலைகளை உருவாக்குவதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக மன்னார் மண் அழிந்து வருகிறது. இவ்விடயத்தில் அரசாங்கம் மாபெரும் அரசியல் ஒன்றை நடத்தி வருகிறது.
மன்னார் மக்கள் இனியும் அவர்களை நம்பிக் கொண்டிருந்தால் நாளுக்கு நாள் ஒவ்வொரு சடலங்கள் வெளிவரும்“ என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
