உயிருக்கு அச்சுறுத்தல் - வெளிநாட்டில் அடைக்கலம் கோரும் அசேல சம்பத்
தமக்கும் தமது குடும்பத்தினருக்கும் உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால், வெளிநாடு ஒன்றில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
அஸ்ராசெனகா தடுப்பூசி மருந்து தொடர்பில் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட கருத்துக்களை அடிப்படையாக கொண்டு கைதுசெய்யப்பட்ட அவர், பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த அரசியல் தஞ்ச கோரிக்கையை விடுத்துள்ளார்.
நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் அசேல சம்பத் அரசியல் தஞ்ச கோரிக்கை முன்வைத்துள்ளதாக கொழும்பின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்த நிலையில், அது குறித்து ஐபிசி தமிழ், அசேல சம்பத்துடன் தொடர்பை ஏற்படுத்தி அந்த விடயத்தை உறுதிப்படுத்தியது.
வழக்கு விசாரணைகள் காணப்படுவதால் தம்மால் வெளிநாடு செல்ல முடியாது எனவும், ஆகவே தமது நான்கு பிள்ளைகள் மற்றும் மனைவியின் பாதுகாப்பு மற்றும் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு, வெளிநாடு ஒன்றில் அரசியல் தஞ்சம் பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுப்பதாக, அசேல சம்பத் ஐபிசி தமிழுக்கு தெரிவித்தார்.