இன்னும் சில வருடங்களில் பூமியை நெருங்கவுள்ள விண்கல்! நாசா வெளியிட்ட அறிவிப்பு
“குழப்பத்தின் கடவுள்" (God of Chaos) என்று அழைக்கப்படும் மூன்று கால்பந்து மைதானங்களின் அளவு கொண்ட பிரம்மாண்டமான அப்போபிஸ் விண்கல், வரும் 2029-ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ஆம் திகதி பூமிக்கு மிக அருகில் கடந்து செல்லும் என்று நாசா தெரிவித்துள்ளது.
பூமியின் மேற்பரப்பில் இருந்து சுமார் 20,000 மைல் உயரத்தில் இந்த விண்கல் பயணிக்கவுள்ளது.
இது பூமியைச் சுற்றி வரும் பல செயற்கைக்கோள்கள் இருக்கும் தூரத்தை விடக் குறைவானது என்பதால், விஞ்ஞானிகள் இதனை மிக நெருக்கமான தூரத்தில் இருந்து ஆய்வு செய்ய ஒரு அரிய வாய்ப்பாகக் கருதுகின்றனர்.
மனிதர்களுக்கான ஆபத்து
ஆரம்பத்தில் இது அபாயகரமான விண்கல்லாகக் கருதப்பட்டாலும், அடுத்த 100 ஆண்டுகளுக்கு இந்த விண்கல்லால் பூமிக்கோ அல்லது மனிதர்களுக்கோ எந்தவித ஆபத்தும் இல்லை என்று நாசா பொதுமக்களுக்கு உறுதி அளித்துள்ளது.

Image Credit: Space
விண்வெளியில் உள்ள விண்வெளி வீரர்கள் அல்லது செயற்கைக்கோள்களுக்கும் இதனால் பாதிப்பு ஏற்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானிலை சாதகமாக இருந்தால், கிழக்கு அரைக்கோளத்தில் வாழும் மக்கள் இந்த விண்கல்லை வெறும் கண்களால் பார்க்க முடியும் என்றும் இத்தகைய ஒரு நிகழ்வு விண்வெளி ஆராய்ச்சியில் இதுவரை கண்டிராத ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பாக அமையும் என்று விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |