கஜேந்திரன் மீது தாக்குதல் சம்பவம்: கனேடிய அமைச்சர் கடும் கண்டனம்
திருகோணமலையில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீது தாக்குதல் நடத்தப்பட்டமைக்கு கனேடிய அமைச்சர் கரி ஆனந்தசங்கரி கண்டன அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
திலீபனின் 36ஆம் ஆண்டை முன்னிறுத்தி ஏற்பாடு செய்யப்பட்ட ஊர்திப் பவனியில் திலீபனின் உருவப்படத்தை ஏற்றிச் சென்ற வாகனம் குழுவொன்றினால் சுற்றிவளைக்கப்பட்டது.
இதனையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட குழுவினர் மீதும் திலீபனின் உருவப்படத்தை தாங்கிய வாகனத்தின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.
அறிக்கை
குறித்த அறிக்கையில் இது தொடர்பாக கரிஆனந்தசங்கரி கூறுகையில், “சட்டத்தை வெட்கமின்றி மீறுபவர்கள் அனுபவிக்கும் தொடர்ச்சியான தண்டனையற்ற சுதந்திரத்தை, இந்த சம்பவம் எடுத்து காட்டுகிறது” என கூறியுள்ளார்.
அதேவேளை, தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காதமை ஏமாற்றமளிப்பதாக கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் சல்மா சாஹிட் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு அனைவருக்கும் சட்டத்தின் ஆட்சி சமமானதாக இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.