மருத்துவ பீட மாணவர் மீதானதாக்குதல் - சரணடைந்த இராஜாங்க அமைச்சரின் மகன்
ராகம மருத்துவ பீட மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டேவின் (Arundika Fernando)மகன் ராகம காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் களனி பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் மேற்பார்வையில் 2 விசேட காவல்துறை குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், தாக்குதலில் காயமடைந்த 3 மாணவர்களில் இருவர் ராகம போதனா வைத்தியசாலையிலும் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக நீர்கொழும்பு பொது வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ராகம மருத்துவ பீட மாணவர்கள் மீதான தாக்குதல் சம்பவத்தில் தான் ஈடுபட்டது உறுதியானால் அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாக இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் ராகம மருத்துவ பீடத்தின் மூன்றாம் வருட மாணவனை நேற்று நேரில் சென்று பார்த்த போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.