காசா மருத்துவமனை மீது தாக்குதல் : பல நாடுகளில் வெடிக்கும் போராட்டங்கள்
காசாவில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு உலக நாடுகள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளன.
பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இஸ்ரேலை கண்டித்தும் அரசு நாடுகளில் போராட்டங்கள் வெடித்துள்ளன.
இதேவேளை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், காசாவில் உள்ள அல் அஹ்லி மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சிறுவர்கள், நோயாளிகள் என 500 பேர் வரை கொல்லப்பட்ட சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
துனிசியா நாட்டில் ஆர்ப்பாட்டம்
மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து துனிசியா நாட்டின் தலைநகரில் நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அங்குள்ள அமெரிக்க மற்றும் பிரான்ஸ் தூதரக அதிகாரிகளை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என கோசமிட்டனர்.

இந்நிலையில் அப்பாவி மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலைக் கண்டித்து காசாவின் மேற்கு கரை பகுதியில் நள்ளிரவில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி விரட்டி அடித்ததால் அப்பகுதியே போர்க்களம் போன்று காட்சி அளித்தது.
இஸ்ரேல் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம்
அத்துடன் ஜோர்டான் தலைநகரில் உள்ள இஸ்ரேல் தூதரகம் முன்பு நள்ளிரவில் திரண்ட நூற்றுக்கணக்கான மக்கள் மருத்துவமனை மீதான தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கைகளில் காலணிகளை ஏந்தி ஜோர்டானியர்கள் இஸ்ரேலுக்கு எதிராக கோசமிட்டதுடன் அங்கிருந்த வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
இதேவேளை இஸ்ரேல் தூதரகத்திற்குள் நுழைந்து தாக்குதலில் ஈடுபட முயற்சித்தவர்களை காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி விரட்டி அடித்ததால் இரு தரப்பிற்கும் இடையே மோதல் வெடித்தது.