அவுஸ்ரேலியாவில் வசிக்கும் இலங்கை குடும்பத்தினர் மீது தாக்குதல்
அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் குழுவொன்றினால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னை வசிப்பிடமாகக் கொண்ட துசித, அவரது மனைவி நிலந்தி ஆகியோர் தாக்கப்பட்டுள்ளனர். தாக்குதலின் போது அவர்களது விசேட தேவையுடைய மகளும் உடனிருந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த தாக்குதலின் பின்னர் சிறுமி அதிர்ச்சியில் இருப்பதாகவும் துசித வெளிநாட்டு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
நடவடிக்கை எடுக்கவில்லை
இதேவேளை, பல்லாரட் காவல் நிலையத்திற்கு அருகாமையில் இந்த தாக்குதல் இடம்பெற்றதாகவும், தாக்குதலுக்கு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் துசித குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும், தாக்குதல் நடந்த இடத்தில் சிசிடிவி கமராக்கள் வேலை செய்யவில்லை என காவல்துறை அதிகாரிகள் அவருக்கு கூறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏறக்குறைய 10 வருடங்களாக மெல்போர்னில் வசிப்பதாகவும், இந்த எதிர்பாராத சம்பவத்தால் மிகுந்த சிரமத்திற்கு ஆளானதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் பல்லாரட் நகரசபை ஆணையாளரும் அதிருப்தி வெளியிட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகமொன்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
