தமிழ் அரசியல் கைதிகளை குற்றவாளிகளாக்கும் முயற்சி தோல்வியில் : அருட்தந்தை சத்திவேல் சுட்டிக்காட்டு
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தமிழ் அரசியல் கைதிகளை குற்றவாளிகளாக்கும் பயங்கரவாதிகளின் முயற்சி இன்று தோல்வி அடைந்துள்ளதாக சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானின் முன்னாள் உயர்ஸ்தானிகரை கொலை செய்ய சதி செய்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட மூன்று தமிழ் அரசியல் கைதிகளும் இன்று(10) விடுவிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக ஐ.பி.சி தமிழுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
போதிய சாட்சியங்கள் இல்லை
இலங்கைக்கான பாகிஸ்தானின் முன்னாள் உயர்ஸ்தானிகர் பசீர் அலி மொஹமட்டை கொலை செய்வதற்கு சதி செய்தார்கள் என குற்றஞ்சாட்டப்பட்டு, தொடரப்பட்ட வழக்கில் இருந்து பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட மூன்று பிரதிவாதிகள் 16 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட யோகராஜா நிரோஜன், சுப்பிரமணியம் சுரேந்திரராஜா மற்றும் கனகரெத்தினம் ஆதித்தன் ஆகிய மூவருமே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளதாக அவர்கள் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி கே.வி.தவராசா ஐ.பி.சி தமிழுக்கு தெரிவித்துள்ளார்.
கடந்த 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 14 ஆம் திகதி கொள்ளுப்பிட்டி பகுதியில் வாகனப் பேரணியாக சென்று கொண்டிருந்த பாகிஸ்தான் முன்னாள் உயர் ஸ்தானிகரை கொலை செய்ய சதிசெய்ததாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க போதிய சாட்சியங்களை சட்டமா அதிபர் முன்வைக்க தவறியுள்ளதன் அடிப்படையில் குறித்த மூவரையும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மகேன் வீரமன் இன்று விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளார்.
