கல்கிஸ்ஸை நீதிமன்ற விவகாரம்: சட்டத்தரணியிடம் வாக்குமூலம் பதிவு!
புதிய இணைப்பு
கல்கிஸ்ஸை காவல்துறையினர் இன்று (18.10.2025) சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க மற்றும் அவரது மகனிடம் வாக்குமூலங்களைப் பெற்றுக் கொண்டுள்ளனர்.
கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் இவ்வாறு வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.
கடந்த 10 ஆம் திகதி கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்தில் காவல்துறை அதிகாரி ஒருவர் சட்டத்தரணியை தாக்கியதாக குற்றம் சுமத்தி சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க, குறித்த காவல்துறை அதிகாரியை தகாத வார்த்தைகளால் திட்டும் காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தது.
முதலாம் இணைப்பு
கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் காவல்துறை அதிகாரி ஒருவருக்கும் சட்டத்தரணி ஒருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு தொடர்பில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க கல்கிஸ்ஸை காவல் நிலையத்தில் இன்று (18.10.2025) காலை முன்னிலையாகியுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க கல்கிஸ்ஸை காவல் நிலையத்தில் இவ்வாறு முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் கடந்த 10 ஆம் திகதி காவல்துறை அதிகாரி ஒருவருக்கும் சட்டத்தரணி ஒருவருக்கு இடையில் தகராறு ஏற்பட்டது.
பிணை அனுமதி
இது தொடர்பில் குறித்த காவல்துறை அதிகாரி, காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அதனைத்தொடரந்து, கல்கிஸ்ஸை காவல் நிலையத்திலிருந்து பிலியந்தலை காவல் நிலையத்திற்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், குறித்த காவல்துறை அதிகாரிக்கு கடமையை செய்யவிடாமல் இடையூறு விளைவித்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க நீதிமன்றில் முன்னிலையாகாமல் இருந்த நிலையில் கடந்த புதன்கிழமை (15.10.2025) கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
அதனைத் தொடர்ந்து சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
