நுவரெலியாவில் சீரற்ற காலநிலையால் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்வு!
நுவரெலியா (Nuwara Eliya) மாவட்டத்தில் பெய்த மழை மற்றும் காற்றினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் 958 குடும்பங்களைச் சேர்ந்த 3641 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அதிகாரி, அண்மைய நாட்களில் இந்த பிரதேசங்களில் ஏற்பட்ட காற்று மற்றும் மழையினால் மரங்கள் முறிந்து வீழ்ந்ததாலும் கூரைகள் தூக்கி வீசப்பட்டதாலும் 950 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
இடம்பெயர்வு
மேற்படி குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அந்தச் சூழ்நிலை காரணமாக இடம் பெயர்ந்துள்ளதாகவும், இடம் பெயர்ந்தவர்களில் பெரும்பாலானோர் தற்காலிகமாக உறவினர் வீடுகளில் தங்கி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த மாவட்டத்தில் நான்கு பாதுகாப்பான இடங்கள் அமைக்கப்பட்டு அந்த பாதுகாப்பான இடங்களில் மக்கள் இருந்ததாகவும், தற்போது அந்த மக்களும் அந்த பாதுகாப்பான இடங்களை விட்டு வெளியேறி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இடம்பெயர்ந்த மக்களின் எதிர்கால தேவைகள் தொடர்பில் உரிய பிரதேச செயலகங்கள் அவதானித்து வருவதாகவும் அதிகாரி தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். |