வியாழேந்திரன் வீட்டின் முன் படுகொலை செய்யப்பட்ட பாலசுந்தரம்! கண்ணீர்விட்டு கதறி அழுத தந்தை (காணொளி)
இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் (S.Viyalanderan Amal) வீட்டிற்கு முன்னால் கடந்த ஆறாம் மாதம் மூன்றாம் திகதி இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த பாலசுந்தரத்தின் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சி.ரிஸ்வான் ( A.C. Riswan) முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இம்மாதம் 21ஆம் திகதி வரை கொலையாளியை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
குறித்த வழக்கு தொடர்பாக உயிரிழந்த பாலசுந்தரத்தின் தந்தை ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு காவல்துறைப் பிரிவில் இடம்பெற்ற படுகொலை சம்பவத்தினை ஏறாவூர் காவல்துறையினர் விசாரணை செய்து அறிக்கைகள் வழங்காத காரணத்தினால், குறித்த சம்பவம் தொடர்பில் மீண்டும் விசாரணையை முன்னெடுக்க கரடியனாறு காவல்துறையினருக்கு மாற்றப்பட்டுள்ளது. இதன் காரணமாக தாங்கள் அலைந்து திரிகின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த இடத்தில் எந்த துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என காவல்துறையினரிடம் நிதிபதி வினவியபோது எந்த துப்பாக்கியால் சுட்டது என்பது தெரியாது என தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கி எதுவென்று தெரியாத ஒருவருக்கு எவ்வாறு துப்பாக்கியை வழங்கினார்கள் என்பது வேதனை அளிக்கின்றது.
கைத்துப்பாக்கியால் சுட்டாரா அல்லது பெரிய துப்பாக்கியால் சுட்டாரா என்று கூட தெரியாத அளவுக்கு மட்டக்களப்பு காவல்துறையினர் நடந்து கொள்ளும் விதம் மிகவும் வேதனையளிக்கின்றது.
தங்களது மகனது கொலைக்கான நீதியை மறைப்பதற்கு காவல்துறையினர் செயற்படுகின்றனர்.
எது எவ்வாறாக இருந்தாலும் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டு இன்று 7 மாதங்கள் கடந்த நிலையிலும் இதுவரைக்கும் எந்த விதமான அறிக்கைகளும் காவல்துறையினரினால் மன்றுக்கு சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளனர்.