கொழும்பில் பரபரப்பான நேரத்தில் துப்பாக்கி தாக்குதல் - தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் சம்பவம்
இரண்டாம் இணைப்பு
பம்பலப்பிட்டி பகுதியில் இன்று நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட நால்வரும் மதுவரித் திணைக்கள அதிகாரிகள் என தெரிவிக்கப்படுகின்றது.
பம்பலப்பிட்டி மெரின் டிரைவ் பகுதியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வாகனம் ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த வாகனத்தில் பயணித்தவர்கள் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் என சந்தேகிக்கப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

முதலாம் இணைப்பு
கொழும்பு – பம்பலபிட்டி பகுதியில் இன்று(07) பிற்பகல் கார் ஒன்றை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
பம்பலபிட்டி, கரையோர (மெரின் டிரைவ்) வீதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அண்மித்துள்ள குறுக்கு வீதியொன்றிலேயே இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
வான் ஒன்றில் வருகை தந்த அடையாளம் தெரியாத நபர்களினால், கார் ஒன்றில் பயணித்தவர்களை இலக்கு வைத்து இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதோடு, துப்பாக்கி பிரயோகத்தை அடுத்து, வான் மற்றும் கார் ஆகியவற்றில் பயணித்தவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
மேலதிக விசாரணை

துப்பாக்கி பிரயோகத்தினால் காருக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், குறித்த பகுதியிலிருந்து சில துப்பாக்கி தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம், தொடர்பான மேலதிக விசாரணைகளை பம்பலபிட்டி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.