சீன கப்பலை நாட்டுக்குள் அனுமதிக்க வேண்டாம் - சிறிலங்கா அரசாங்கத்திடம் இருந்து சென்றது அறிவிப்பு
சீனாவில் தயாராகும் தரம் குறைந்த இரசாயனப் பசளை தாங்கிய கப்பலை கொழும்பு துறைமுகத்திற்குள் அனுமதிக்க வேண்டாம் என்று சிறிலங்கா அரசாங்கத்திடமிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ரமேஷ் பத்திரண (Ramesh Pathrana) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கொழும்புத் துறைமுக அதிகாரிகள் ஊடாக குறித்த கப்பல் நிறுவனத்திற்கு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்றைய தினம் நடைபெற்றுள்ளது.
இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
சீனாவிலிருந்து அனுப்பிவைக்கப்பட்டிருந்த இரசாயனப்பசளை அடங்கிய கப்பல் அரசாங்கத்தினால் திருப்பியனுப்பி வைக்கப்பட்ட போதிலும் குறித்த கப்பல் தொடர்ந்தும் தென்னிலங்கை கடற்பரப்பிலேயே தரித்து நிற்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கப்பலை நாட்டிற்குள் பிரவேசிக்க அனுமதிக்க முடியாது என்பதை கொழும்புத்துறைமுகம் குறித்த கப்பல் நிறுவனத்திடம் அறிவித்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள சீனத்தூதுவரை விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே (Mahindananda Aluthgamage) நேற்று இரவு சந்தித்திருப்பதையும் அவர் இதன்போது உறுதிப்படுத்தியுள்ளார்.