சபையில் அநாகரீகமான வார்த்தைப் பிரயோகங்கள் பயன்படுத்த தடை : சபாநாயகர் அதிரடி அறிவிப்பு
நாடாளுமன்ற சபை நடவடிக்கைகளின் போது, பொருத்தமற்ற, அநாகரீகமான வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுமாறு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (Jagath Wickramaratne) அறிவித்துள்ளார்.
இன்றைய (14.11.2025) நாடாளுமன்ற சபை நடவடிக்கையின் ஆரம்பத்தில், சபாநாயகரின் அறிவித்தலாக அவர் இந்த வியடத்தினை குறிப்பிட்டார்.
சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அநாகரீகமான வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்துவதை தொடர்ச்சியாக தாம் அவதானித்து வருவதாக சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜகத் விக்ரமரத்ன எச்சரிக்கை
அவ்வாறான வார்த்தைப் பிரயோகங்கள் நாடாளுமன்ற கௌரவத்தை சீர்குலைப்பதுடன், வேதனைப்படக்கூடிய விடயமாக கருதுவதாகவும் சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி ஒருசில நாடாளுமன்ற உறுப்பினர்களை தனிப்பட்ட ரீதியில் பெயர் கூறியும், அவர்களை இலக்கு வைத்தும், அநாகரீகமான வார்த்தைப் பிரயோகங்களை இனிவரும் காலத்தில் சபையில் பயன்படுத்தக்கூடாது என ஜகத் விக்ரமரத்ன எச்சரித்துள்ளார்.
நாட்டின் உயர்பீடமாக திகழும் நாடாளுமன்றத்தின் ஒழுக்கத்தை உரியமுறையில் பேணுவதற்கு, மக்கள் பிரதிநிதிகள் அனைவரினதும் ஒத்துழைப்பையும் சபாநாயகர் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |