மோடியை சந்திக்கத் தயாராகும் பசில்!
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை புதுடெல்லியில் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சந்திப்பிற்கான ஆயத்தங்களை இலங்கையும் இந்தியாவும் செய்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் என்பன இந்த விஜயம் குறித்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.
எதிர்வரும் சில நாட்களில் இந்த சந்திப்பு நடைபெறும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவுடன் நெருங்கிய உறவுகள் காணப்படுவதாகவும் ஒரு துறைசார்ந்து கவனம் செலுத்தப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும், மேலும் இந்தியாவிடம் கடன் பெற்றுக்கொள்ளும் உத்தேசம் நிதியமைச்சருக்கு கிடையாது என அமைச்சர் பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவிலிருந்து கூடுதலான முதலீடுகளை பெற்றுக்கொள்வதுடன், சுற்றுலாப் பயணிகளை அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகவியிலாளர்களிடம் அமைச்சர் பீரிஸ் இன்று இதனைத் தெரிவித்துள்ளார்.
சேதன உரக் கப்பல் தொடர்பில் சீன நிறுவனத்துடன் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.