விமல் – பஸில் அணிகளுக்கு இடையே மோதல்? விமல் தலைமையிலான சந்திப்பில் அம்பலம்!
ஸ்ரீலங்கா அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற 11 பங்காளிக் கட்சிகள், இம்முறை மே தினத்தை வெவ்வேறாக செய்வதற்கு தீர்மானித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொழும்பில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸின் வீட்டில் நேற்று முன்தினம் இரவு அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையில் நடந்த சந்திப்பின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்குள் உள்ள அமைச்சர் விமல் வீரவன்ச அணியினர் நேற்று முன்தினமும் கொழும்பில் விசேட பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியிருக்கின்றனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸின் கொழும்பு – ரொஸ்மிட் பிளேஸில் உள்ள அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்த இந்த சந்திப்பில் 11 கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, ஏ.எல்.எம். அதாவுல்லாஹ், இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரண, டிரான் அலஸ், கெவிந்து குமாரதுங்க, அசங்க நவரத்ன, அத்துரலிய ரத்தன தேரர், முன்னாள் எம்.பி டியூ குணசேகர உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
விசேடமாக அடுத்தமாதம் முதலாம் திகதி மே தினத்தில் அரசாங்கத்தின் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் இணைந்து நடத்தாமல், தனித்தனியே மே தினத்தை நடத்த இந்த சந்திப்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த சந்திப்பின் போது விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
இதுதவிர, மக்களின் வாழ்க்கைச்சுமை அதிகரிப்பு, அரசாங்கத்திற்குள் எழுந்து வருகின்ற பிரச்சினைகள் பற்றியும் அதிகமாக பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
விமல் – பஸில் அணிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் கடந்த பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி விமல் நடத்திய இரவுச் சந்திப்பினைத் தொடர்ந்து வெளிச்சத்திற்கு வந்தது.
அந்த சந்திப்பின் பின்னர், நேற்று நடந்த சந்திப்பானது மூன்றாவது சந்திப்பாகும்.