முள்ளிவாய்க்கால் நினைவு தூவி உடைக்கப்பட்டமை அதி உச்ச ஜனநாயக மீறல்!
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூவி உடைக்கப்பட்டது என்பது ஒரு ஜனநாயக மீறல் என்று மட்டக்களப்பு மாவட்ட மாநகர முதல்வர் தி .சரவணபவன் தெரிவித்துள்ளார்.
இன்று நடந்த ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது உரிமை, உணர்வுகளை தடுப்பதற்காக இவ்வாறான செயற்பாடுகளை செய்யலாம் ஆனால் மனதுக்குள் இருக்கின்ற உணர்வை எவராலும் தடுக்க முடியாது. இதை தடுக்கத் தடுக்க இந்த உணர்வானது மேலும் அதிகரித்துக்கொண்டே செல்லும்.
இறந்த ஆத்மாக்களை நினைவு கூர்வதற்கு அமைக்கப்பட்ட தூபியை உடைப்பது என்பது தமிழ் மக்கள் மீது அரசாங்கம் பிரயோகிக்கும் அதிஉச்ச அடக்குமுறையாகவே நான் இதை பார்க்கின்றேன்.
ஏப்ரல் 21 தாக்குதல் நினைவு தினத்திற்கு பூரண ஆதரவு வழங்கிய பாதுகாப்பு படையினர் முள்ளிவாய்க்கால் நிகழ்வு அஞ்சலி செலுத்துவதற்கு தடை விதிப்பது உண்மையிலேயே தமிழர் தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடாது என்ற காரணத்துக்காகவே வழங்கியுள்ளனர்.
எமது இனம் அழிக்கப்பட்டதற்கு நினைவு தினம் செய்ய தடை விதிப்பது ஜனநாயாக மீறல் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.