ஈஸ்டர் தாக்குதலுக்கு மட்டக்களப்பு தெரிவு செய்யப்பட்டது ஏன்...! வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்
சிறையில் இருந்து பிள்ளையான் விடுதலை செய்வதையும் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தெரிவாவதையும் இலக்காக கொண்டே உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்கு மட்டக்களப்பு தெரிவு செய்யப்பட்டதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இன்றைய தினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்விலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மேலும், ஆட்கொலை படைப் பிரிவான ரிப்பொலி பிளட்ரூன் தொடர்பாக அதிபர் ஆணைக்குழுக்களிடம் முன்வைத்த விடயங்கள் இதுவரை வெளிவரவில்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆட்கொலை படைப்பிரிவான ரிப்போலி பிளட்ரூன்
இது குறித்து அவர் மேலும் உரையாற்றுகையில், ஆட்கொலை படைப்பிரிவான ரிப்போலி பிளட்ரூனை எடுத்துக்கொண்டால், அது ஆரம்பித்தது இன்று நேற்று அல்ல. ரிப்போலி பிளட்ரூன் 2015 ஆம் ஆண்டில் இருந்து செயற்பட்டுவருகின்றது.
ரிப்போலி பிளட்ரூனில் காத்தான்குடியை சேர்ந்த காவல்துறை உத்தியோகத்தரான பாயிஸ் என்பவர் இருந்தார். ஏறாவூரை சேர்ந்த சமாட் என்பவர் இருந்தார். ஒட்டமாவடியை சேர்ந்த கலீல் என்பவர் இருந்தார்.
ரிப்போலி பிளட்ரூன் ஊடாக காத்தான்குடி, மாத்திரமல்ல, மட்டக்களப்பில் பாரிய அளவில் மக்கள், தேவைக்கு ஏற்றவாறு கொலை செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக அதிபர் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்ட எந்தவொரு அறிக்கையும் அதிபர் ஆணைக்குழு வெளியிடவில்லை.
அதிபர் ஆணைக்குழுவிற்கு ரிப்போலி பிளட்ரூன் தொடர்பாக விடயங்களை முன்வைத்த சாட்சிகள் தற்போதும் வெளியில் உள்ளனர்.
ஏன் மட்டக்களப்பில் குண்டு வெடித்தது
நாட்டின் ஏனைய மாவட்டங்களில் குண்டுகள் வெடிக்கும் போது, ஏன் மட்டக்களப்பில் குண்டு வெடித்தது என்ற கேள்வி எழுந்தது.
கோட்டாபய ராஜபக்ஸ மீண்டும் அதிகாரத்திற்கு வருவதற்கு இந்த இஸ்லாமிய எதிர்ப்பு கடும்போக்குவாதி குழு தேவைப்பட்டது போன்று, 2015 ஆம் ஆண்டு 10 ஆயிரம் வாக்குகளை கூட பெற முடியாத பிள்ளையானுக்கு, மீண்டும் வெற்றிபெறுவதற்கே மட்டக்களப்பும் குண்டுத் தாக்குதலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது.
ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தை விடுத்து, சபைக்குரிய தேவாலயம் தாக்குதலுக்கு ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஏனெனில் சபைகளுக்குரிய தேவாலயத்தை சேர்ந்த பலர் மட்டக்களப்பில் இருக்கின்றனர்.
பிள்ளையான் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வருவதற்கும் சிறையில் இருந்து வெளிவருவதற்குமே மட்டக்களப்பை தெரிவு செய்து தாக்குதல் நடத்தப்பட்டது.
லசந்த விக்ரமதுங்கவின் கொலை
மட்டக்களப்பு சியோன் தேவாலயம் ஏன் தெரிவுசெய்யப்பட்டது? நாம் கூறும் விடயங்கள் தொடர்பாக விசாரணைக்கு உட்படுத்த வேண்டியது எம்மை அல்ல. நாம் குறிப்பிடும் விடயங்கள் குறித்து விசாரணை நடத்துங்கள்.
ரிப்பொலி பிளட்ரூனில் பிள்ளையானின் குழுவை சேர்ந்தவர்களும் இருந்தனர்.
தீவுச் சேனை என்ற பகுதியிலேயே இதன் தலைமையகம் இருந்தது. ரிப்பொலி பிளட்ரூனை சேர்ந்தவர்களின் ஒளிப்பதிவுகள் வெளியில் ஊடகங்களிடம் இருக்கின்றன.
லசந்த விக்ரமதுங்கவின் கொலை, எக்னலிகொடவின் கொலை, கீத் நோயர் தொடர்பாக, முன்னாள் போராசிரியர் தம்பையா, முன்னாள் விரிவுரையாளர் ரவீந்திரன் போன்றவர்களும் இலக்கானமை தொடர்பாக பாரிய அளவான தகவல்கள் உள்ளன
நீதி அமைச்சர் என்மீது குற்றஞ்சாட்டுவதை விடுத்து, இந்த தகவல்கள் குறித்து உரிய விசாரணையை நடத்த வேண்டும் என கோருகின்றேன். என தெரிவித்துள்ளார்.