ராஜபக்சக்களை குற்றம்சாட்டாதே... வெளிச்சத்துக்கு வந்த போலி ஆர்ப்பாட்டம்
பிரித்தானியாவின் சனல்-4 ஊடகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், தாம் எதற்காக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுகிறோம் என்பதை அறியாமல் வருகை தந்திருந்தமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற சிலரிடம் சமூக செயற்பாட்டாளர்கள் கேள்வியெழுப்பிய போது, இந்த விடயம் தெரியவந்துள்ளதுடன் இது தொடர்பான காணொளிகள் சமூக ஊடகங்களில் தற்போது அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றன.
இலங்கையில் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்புலத்தில் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச இருந்ததாக சனல்-4 ஊடகம் வெளியிட்ட ஆவணப்பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சனல்-4வை எதிர்க்கின்றீர்களா
குறித்த ஆவணப்பதிவை எதிர்த்து தேசியத்தை கட்டியெழுப்புதல் மற்றும் நல்லிணக்கத்திற்கான இயக்கத்தால் கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக நேற்றைய தினம் அமைதி ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிகளவான வயோதிபர்கள் கலந்து கொண்டுள்ளமை குறித்து சமூக ஊடகங்களில் அதிகளவான காணொளிகள் பகிரப்பட்டு வருகின்றன.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வயோதிபர் ஒருவரிடம் சனல்-4வை எதிர்க்கின்றீர்களா என சமூக செயற்பாட்டாளர் ஒருவர் கேள்வியெழுப்பிய போது, தமக்கு தெரியாதென பதிலளித்துள்ளார்.
உண்மையான ராஜபக்ச ஆதரவாளர்களால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவில்லை என்பது இதன் மூலம் தெரியவந்துள்ளதாக சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் மகிந்த ராஜபக்ச பிரதமராக இருந்த போது, அவர் தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்ற கூட்டத்தில் சிறைக் கைதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்த சம்பவத்தை போன்ற ஒன்றாக சனல்-4வுக்கு எதிரான ஆர்ப்பாட்டமும் அமைந்துள்ளதாக விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.