சிறுவனுக்கு எமனான ஊஞ்சல்! கதறும் பெற்றோர்
கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மகிழடித்தீவு பிரதேசத்தில் சிறுவன் ஒருவர் தவறுதலாக ஊஞ்சல் சீலையில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியைச் சேர்ந்த தரம் மூன்றில் கல்வி கற்கும் எட்டு வயதுச் சிறுவனே இவ்வாறு நேற்றையதினம் (23) உயிரிழந்துள்ளார்.
சிறுவன் சகோதரர்களுடன் தனது வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த போது நாளாந்தம் தான் ஏறி விளையாடும் சிறிய மாமரத்தில் தனது தாயின் சேலையினை எடுத்து அதனூடாக ஊஞ்சல் அமைத்து விளையாட முற்பட்ட போது குறித்த சேலையில் தவறுதலாக சிக்குண்டுள்ளார்.
தாயார் மாடுகளை மேய்ப்பதற்காக வெளியே சென்று வீடு திரும்பியதும், தனது மகனை தேடியபோது வீட்டு மாமரத்தில் சேலையில் சிக்குண்ட நிலையில் காணப்பட்டுள்ளார்.
சிறுவன் உடனடியாக மீட்கப்பட்டு மகிழடித்தீவு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரியவந்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைய சம்பவ இடத்திற்குச் சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரனை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் பிரேதத்தை பார்வையிட்டதுடன், பிரேதத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தும்படி பொலிஸாரிடம் உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.