மட்டக்களப்பில் பாலர் பாடசாலையை அகற்ற முற்படும் பிரதேச செயலாளரின் பொறுபற்ற செயல்
மட்டக்களப்பில் அரச காணியில் இயங்கி வந்த பாலர் பாடசாலையொன்றை அந்த இடத்தை விட்டு வெளியேறுமாறு பிரதேச செயலாளர் அறிவித்துள்ளமை பாரிய சர்ச்சையாக வெடித்துள்ளது.
மட்டக்களப்பு பனியர் வீதியில் அமைந்துள்ள மட்டு ரோட்டரி கழக கட்டிடத்தில் சமூக சீரழிவு இடம்பெறுவதாகவும் அதை பொதுமக்களுக்கு அசௌரியம் கொடுக்காமல் செயற்படுமாறு அறிவித்துவிட்டு அதற்கு அருகில் இயங்கிவரும் மதர் கெயார் பாலர் பாடசாலையை அங்கிருந்து வெளியேறுமாறு பிரதேச செயலாளர் அறிவித்துள்ளார்.
ஆகவே அவர், சமூக சீர்கேட்டை ஊக்குவிக்கின்றாரா ? மற்றும் பிள்ளைகளின் கல்வியை அழிக்கின்றாரா? என பெற்றோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கட்டிட குத்தகை
குறித்த வீதிக்கு ஒதுக்கப்பட்ட காணியில் ( (Reservation) கடந்த 2000 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக, அப்போது அரச திணைக்கள தலைவர்கள் இந்த கட்டிடங்களை அமைத்துள்ளனர்.
இந்தநிலையில் குறித்த கட்டிடங்களை மாநகரசபை தனக்கு சொந்தமானது என தெரிவித்த நிலையில், அதற்கான கட்டிட குத்தகை பணத்தை ரோட்டரி கழகம் மாநகரசபைக்கு செலுத்தி வந்துள்ளது.
இவ்வாறான நிலையில், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் அண்மையில் பொறுப்பேற்ற பிறகு இந்த ரோட்டரி கழகம் மற்றும் பாலர் பாடசாலை அமைந்துள்ள காணி அரச காணி என கண்டுபிடித்துள்ளார்.
பாடசாலை கட்டிடம்
இதையடுத்து, இது மாநகரசபைக்கு சொந்தம் அல்ல பிரதேச செயலகத்துக்கு சொந்தம் எனவே இனிவரும் காலங்களில் அதற்கான குத்தகை பணத்தை பிரதேச செயலகத்துக்கு செலுத்துமாறு ரோட்டரி கழகத்துக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
இவ்வாறான நிலையில் அருகில் இயங்கி வரும் பாலர் பாடசாலை காணி தொடர்பில் மட்டக்களப்பு ஆணையாளர் மற்றும் ரோட்டரி கழகம் தலைவருக்கும் இடையே (15.06.2002 மற்றும் 01.03.2006) ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கைகள் (01.05.2006) முதல் செல்லுபடியற்றதாக தெரிவித்து மட்டக்களப்பு ஆணையாளர் மற்றும் ரோட்டரி கழக தலைவருக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, மதர் கெயார் பாலர் பாடசாலை கட்டிடம் அமைந்துள்ள காணியும் அரச காணி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசௌகரியங்கள்
இந்தநிலையில், குறித்த காணியில் இருந்து (15.08.2025) திகதி முன்னர் வெளியேறி கிராம உத்தியோகத்தரிடம் ஒப்படைக்குமாறும் அல்லது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதேச செயலாளர் கடிதம் மூலம் பாலர் பாடசாலை தலைமை ஆசிரியருக்கு அறிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில் குறித்த ரோட்டரி கழக கட்டிடத்தில் சமூக சீர்கேடு இடம்பெற்று வருவதாகவும் இதனால் தாம் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகவும் பொதுமக்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
ஆகையினால், பொதுமக்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படாத வண்ணம் செயற்படுவது அனைவரது கடமை எனவும் இது தொடர்பாக அவதானம் செலுத்துமாறும் ரோட்டரி கழக தலைவருக்கு பிரதேச செயலாளர் எழுத்து மூலமாக அறிவித்துள்ளார்.
பாலர் பாடசாலை
இது தொடர்பாக கோட்டைமுனை கிராம உத்தியோகத்தர் மற்றும் போதை பொருள் முற்தடுப்பு உத்தியோகத்தர்களை கண்காணிக்குமாறும் அந்த கடிதத்தில் பிரதியிடப்பட்டுள்ளது.
எனவே சமூக சீர்கேடு இடம்பெற்றுவரும் அதாவது மதுபானம் பாவிப்பதற்கான இடமாக இருக்கும், ரோட்டரி கழகத்தை வெளியேற்றாமல் மாணவர்கள் கல்வி கற்று வரும் பாலர் பாடசாலை வெளியேற்றுகிறார் என்றால் அவரது செயல்பாடு சமூக சீர்கேட்டை ஊக்குவிப்பதாக தோன்றுகின்றது என மக்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு, பிள்ளைகளின் கல்வியை மேம்பாட்டை அழிக்கும் இவரது இந்த செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதாகவும் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அரசாங்க அதிபர்
இது தொடர்பாக அரசாங்க அதிபர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த பகுதி மட்டும் அல்லாது ஒல்லாந்தர் கோட்டையில் இருந்து பயனியர் வீதி மற்றும் பார் வீதி ஊடாக சீலாமுனை வரைக்கும் சுமார் நான்கு கிலோமீட்டர் தூரம் முகத்துவாரம் வரை கோட்டையில் இருந்து கடல் தெரியும் வரைக்கும் ஒல்லாந்தர் ஆட்சி காலத்தில் வீதிக்கு என ஒதுக்கப்பட்ட காணியில் சில இடங்களில் சட்டவிரோதமாக அனுமதியின்றி அரச திணைக்கள அதிகாரிகள் மற்றும் சில பணக்காரர்கள் ஆட்சி அதிகாரங்கள் ஊடாக சட்டவிரோத கட்டிடங்களை கட்டி அரச சொத்தை அபகரித்து உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சாதாரண மக்களுக்கு ஒரு சட்டம் அரச அதிகாரிகள் பணம் படைத்தவர்களுக்கு ஒரு சட்டமா? என மக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர். சட்டம் எல்லோருக்கும் சமம் எனில் இந்த மோசடியில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக அரச சொத்தை மோசடியாக அபகரித்த குற்றச்சாட்டின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


