மட்டக்களப்பு கடல் பகுதியை ஆக்கிரமித்துள்ள நண்டினம் : இன்னலுக்குள்ளாகியுள்ள கடற்தொழிலாளர்கள்
ஒருவகை நண்டினமானது மட்டக்களப்பு கடல் பகுதியை ஆக்கிரமித்துள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்த கடற்தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கு முந்தையை காலங்களிலும் இந்த நண்டினம் குறித்த கடல் பகுதிக்கு வருவதாகவும், ஆனால் கடந்த காலங்களில் ஓரிரு நாட்கள் மாத்திரமே வரும் என்றும் தற்போது மாதக்கணக்காக தங்கியிருப்பதாகவும் கடற்தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு மாதக்கணக்கில் நண்டுகள் வந்திருப்பது கடற்தொழிலாளர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
வலைகள் சேதம்
முன்னைய காலங்களில் இது போன்ற நண்டு இனம் இரண்டு மூன்று தினங்களுக்கு மட்டும் கரையொதுங்கி கடற்தொழிலாளர்களின் தொழிலுக்கு இடையூறு விளைவிக்காமல் இருக்கும் என்றும் ஆனால் தற்போது இந்த நண்டினம் கரை ஒதுங்காமல் கடற்தொழிலாளர்கள் தொழில் செய்யும் கடலின் நடுப்பகுதிகளில் தொடர்ந்தும் காணப்படுகின்றதாக தெரிவிக்கின்றனர்.
இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மீன்பிடி வலைகள் சேதமாக்கப்படுவதாகவும் தொழில் புரிய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் கடற்தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
நாட்டில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் குடும்பத்தையும், பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளையும் பார்த்துக்கொள்ளும் மிகப்பெரிய பொறுப்பு இருப்பதன் காரணமாக இது போன்ற இன்னல்களுக்கு மத்தியிலும் கடற்தொழிலாளர்கள் பெரும் பாடுபட்டு வருகின்றதாக தெரிவிக்கின்றனர்.
கடலினை மட்டும் வாழ்வாதாரமாக கொண்டு வாழ்கின்ற கடற்தொழிலாளர்கள் பலர் கஷ்டப்பட்டு மீன்பிடியில் ஈடுபட்டு, பிடித்து வரும் மீன்களுக்கு சரியான விலை நிர்ணயம் இல்லாத காரணத்தினால் இரவு பகலாக வெயிலிலும் மழையிலும் பாடுபடும் மீனவர்கள் வெறுங்கையுடன் வீட்டுக்குச் செல்வதாகவும் கூறுகின்றனர்.
இத்தகைய இன்னலான சூழலில் வாழும் இவர்களுக்கு இந்த நண்டினத்தின் ஆக்கிரமிப்பும் பெரிய சவாலாக இருப்பதாக தெரிவிக்கின்றனர்.