ஜப்பானிய முதலீட்டாளர்களுக்கு பிங்கிரிய முதலீட்டு வலயம் தயார்!
அதிக நிகர மதிப்புள்ள ஜப்பானிய முதலீட்டாளர்களை இலக்காகக் கொண்டு, பிங்கிரிய முதலீட்டு வலயத்தினை தயார் செய்யுமாறு இலங்கை முதலீட்டுச் சபையின் அதிகாரிகளுக்கு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிங்கிரிய முதலீட்டு வலயத்தின் முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தில் உரையாற்றிய போதே முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
பிங்கிரிய முதலீட்டு வலயத்தில் தற்போது ஐந்து திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், முதலீடு செய்யப்பட்ட திட்டங்களின் மதிப்பு சுமார் ஐம்பது மில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இலங்கையில் முதலீடு
பிங்கிரிய முதலீட்டு வலயத்தின் முதல் கட்டத்தில் 160 ஏக்கரும், இரண்டாம் கட்டத்தில் 282 ஏக்கரும், மூன்றாம் கட்டத்தில் 650 ஏக்கரும் உள்ளதாக குறிப்பிட்ட அதேவேளை, இந்த விஜயத்தின் போது அமைச்சர் முதலீட்டாளர்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடினார்.
அதன்படி, பிங்கிரிய முதலீட்டு வலயத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாம் கட்டங்களை விரைவில் எளிதாக்குவதற்கும் நிறைவேற்றுவதற்கும் இலங்கை முதலீட்டுச் சபையின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதிபர் ரணில் ஜப்பானுக்கு விஜயம் செய்ததன் பின்னர், இலங்கையில் முதலீடு செய்ய அதிகளவான ஜப்பானிய முதலீட்டாளர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இளைஞர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு
மேலும், இந்தப் புதிய முதலீட்டு வலயத்தின் தொடக்கமானது, இப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு நேரடி வேலைவாய்ப்புகளை வழங்குவது மாத்திரமன்றி, மறைமுகமாக சேவை சார்ந்த புதிய தொழில் வாய்ப்புகளும், வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படும் என்றும், சாலை மேம்பாடு உட்பட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளிலும் வளர்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இதனடிப்படையில், இலங்கை வந்தவுடன் தமது செயற்திட்டங்களை ஆரம்பிப்பதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி தருமாறும் இராஜாங்க அமைச்சர் அமுனுகம அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |