படகின் உரிமையாளர் ஜேவிபிக்கு நெருக்கமானவர் :புதிய குண்டைப்போடும் விமல்
புதிய இணைப்பு
ஐஸ் மற்றும் ஹெரோயினை நாட்டுக்கு கொண்டு வந்ததாகக் கூறப்படும் படகின் உரிமையாளர் ஜேவிபிக்கு நெருக்கமானவர் என்றும், ஜேவிபிக்காக பணம் செலவழித்தவர் என்றும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், புவக் தண்டவாவே சனா எனப்படும் சனத் வீரசிங்க என்ற இந்த நபர் ஜேவிபியின் வலுவான செயற்பாட்டாளர் என்றும் அவர் கூறினார்.
"ஜேவிபி தலைவர் ஹம்பாந்தோட்டைக்கு வரும்போதெல்லாம் இரவும் பகலும் உணவு வழங்குபவர் இந்த நபர்தான்" என்று அவர் குறிப்பிட்டார். இந்த நபர் உனகுருவைச் சேர்ந்த சாந்தா என்ற பாதாள உலக உறுப்பினருடன் தொடர்புடையவர் என்றும் முன்னாள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த சந்தேக நபர் முன்னர் கைது செய்யப்பட்டு ஜேவிபியின் கடுமையான அழுத்தம் காரணமாக விடுவிக்கப்பட்டார், ஆனால் சமூக ஊடகங்களில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக மீண்டும் கைது செய்யப்பட்டார் என்றும் அவர் தெரிவித்தார்.
"இந்த போதைப்பொருள் அரச அனுசரணையுடன் கொண்டு வரப்படுகிறது, மேலும் போதைப்பொருள் அரச அனுசரணையுடன் கைப்பற்றப்படுகிறது" என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
முதலாம் இணைப்பு
தங்காலைக்கு ஐஸ் கொண்டு வந்த படகு உரிமையாளர் கைது
தங்காலை சீனிமோதர பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட ஐஸ் போதைப்பொருள் தொகையை கொண்டு வந்த குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்ட மீன்பிடி படகின் உரிமையாளரை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு நடத்திய சோதனையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு இன்று (2) மதியம் தங்காலை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மூன்று பாரவூர்திகளில் சிக்கிய போதைப்பொருட்கள்
தங்காலை சீனிமோதர பகுதியில் 3 பாரவூர்திகளில் இருந்து 700 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களை காவல்துறையினர் சமீபத்தில் மீட்டனர்.
இந்த போதைப்பொருள் தொகை வெளிநாட்டிலிருந்து ஒரு பெரிய படகில் கொண்டு வரப்பட்டு ஒரு சிறிய மீன்பிடி படகில் இந்த நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
சிறிய படகின் உரிமையாளர் சந்தேகத்தின் பேரில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
