கண்ணியமாக பதவி விலகுவாரா பொறிஸ் ஜோன்சன்? வலுக்கும் போர்க்கொடி
பிரித்தானியாவில் முடக்க நிலைக்கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்த காலப் பகுதியில் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற மதுபான விருந்துக்கு அழைப்பு விடுத்தமை தொடர்பில் பொறிஸ் ஜோன்சன் (Boris Johnson) மன்னிப்பு கோரியுள்ளார்.
எனினும் பிரதமர் பொறிஸ் ஜோன்சன், மன்னிப்பு கோரியுள்ளமை போதுமானது அல்லவெனக் கூறியுள்ள எதிர்கட்சியான தொழிற்கட்சி, அவர் பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் கொரோனா தொற்றுப் பரவல் தீவிரமடைந்ததை அடுத்து முதல் முறையாக பொதுமுடக்க நிலை கட்டுப்பாட்டை பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தலைமையிலான அரசாங்கம் நடைமுறைக்கு கொண்டுவந்திருந்தது.
இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற விருந்தில் பொறிஸ் ஜோன்சன் அவரது மனைவி உள்ளிட்ட 30 பேர் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த தருணத்தில் வெளியரங்க பகுதியில் ஒருவரை மாத்திரமே சந்தித்து கலந்துரையாட முடியும் என்ற கட்டுப்பாடு இருந்த தருணத்தில், இந்த விருந்து இடம்பெற்றமை தொடர்பான தகவல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் ஊழியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக 25 நிமிடங்கள் வரை குறித்த மதுபான விருந்து நடைபெற்றதை முதல்முறையாக பிரதமர் பொறிஸ் ஜோன்சன் ஏற்றுக்கொண்டுள்ளார்.
விதியை மீறியதாக கருதும் மக்கள், தம்மீதும் அரசாங்கம் மீதும் கொண்டுள்ள ஆத்திரத்தை நன்றி அறிவதாகவும் அதற்காக உளமார மன்னிப்பு கோருவதாகவும் பொறிஸ் ஜோன்சன் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் மதுபான விருந்தை எவ்வாறு பணி சார்ந்த ஒன்றாக பிரதமர் கருத முடியும் என எதிர்கட்சித் தலைவர் உள்ளிட்ட ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சாக்குபோக்கு காரணங்களையும் அபத்தமான பொய்களையும் கூறுவதை விடுத்து கண்ணியமான முறையில் பிரதமர் பதவியில் இருந்து விலகிச் செல்ல வேண்டும் என எதிர்கட்சியான தொழிற்கட்சியின் தலைவர் சேர் கெய்ர் ஸ்டாமர் கூறியுள்ளார்.
முன்னதாக கொரோனா தொற்று விதியை மீறிமைக்காக முன்னாள் சுகாதார அமைச்சர் மெட் ஹான்கொக் தனது பதவியில் இருந்து விலகியிருந்தார் என்பதயும் சேர் கெய்ர் ஸ்டாமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விருந்து தொடர்பில் நகைச்சுவை செய்திருந்த முன்னாள் ஆலோசகர் அலெக்ரா ஸ்ட்றாட்டனின் காணொளி வெளியாகியதை அடுத்து அவரும் பதவி விலகியதாக எதிர்கட்சித் தலைவர் நினைவூட்டியுள்ளார்.
எனினும் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வானது, பணி சார்ந்த ஒன்று என்றே எண்ணிய போதிலும் விருந்தில் பங்குபற்றியவர்களை உடனடியாக அனுப்பியிருக்க வேண்டும் எனவும் பொறிஸ் ஜோன்சன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக காத்திருப்பதாக பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.