பிரிட்டன் பிரதமருக்கு எதிராக கிளர்ச்சி..!!
ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் பாரிய விரிசல்
பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தனது கென்சவேட்டிவ் கட்சியால் நேற்றுக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையில் வெற்றி பெற்றிருந்தாலும், எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிக உறுப்பினர்கள் அவருக்கு எதிராக வாக்களித்ததால் அவர் பதவி விலக வேண்டுமென்ற அழுத்தங்கள் தொடர்ந்தும் விடுக்கப்பட்டு வருகின்றன.
கென்சவேட்டிவ் கட்சியைப் பொறுத்தவரை இது மிகப்பெரிய உட்கட்சிக் கிளர்ச்சியாக நோக்கப்படுவதால் எதிர்வரும் நாட்களில் இது அரசாங்கத்தின் நிகழ்ச்சிநிரல்களை முடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் இந்த வாக்கெடுப்பில் கிடைத்த வெற்றியானது உறுதியான ஒன்றென பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் கூறியுள்ளார்.
பிரித்தானியாவில் கொவிட் 19 பொதுமுடக்க காலப் பகுதியில் பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் விருந்துபாரங்களை நடத்தியமை தொடர்பில் பொறிஸ் ஜோன்சனுக்கு எதிராக நம்பிக்கை தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இந்த தீர்மானத்திற்கு எதிராக 148 பேரும், ஆதரவாக 211 பேரும் வாக்களித்துள்ளனர். இதன்பிரகாரம் அடுத்த ஓராண்டிற்கு பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர முடியாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொறிஸ் ஜோன்சனின் அதிகாரத்திற்கு பாரிய பின்னடைவு
எனினும் நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சிக்கு 359 ஆசனங்கள் இருக்கின்ற போதிலும் 148 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொறிஸ் ஜோன்சனுக்கு எதிரான தீர்மானத்தை மேற்கொண்டுள்ளனர். இது பொறிஸ் ஜோன்சனின் அதிகாரத்திற்கு ஏற்பட்ட பாரிய பின்னடைவு என விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நேற்று இடம்பெற்ற வாக்கெடுப்பு குறிப்பிடத்தக்க ஒன்றென ஸ்கொட்லாந்து தேசிய கட்சியின் பிரித்தானிய நாடாளுமன்றத் தலைவர் இயன் ஃபிளக் போர்ட் கூறியுள்ளார்.
ஆளும் கட்சியிலுள்ள 148 உறுப்பினர்கள் பிரதமருக்கு எதிராக வாக்களிப்பார்கள் என எதிர்பார்த்திருக்கவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்கட்சி என்ற பேரழிவான நிலையை நோக்கி பொறிஸ் ஜோன்சன் கட்சியை வழிநடத்துவதாக கூறியுள்ள கட்சியின் முன்னாள் தலைவர் வில்லியம் ஹேக், பிரதமர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
பொறிஸ் ஜோன்சன் அரசு தப்பியது - சற்றுமுன் வெளிவந்த முடிவு |
எனினும் இந்த வெற்றியானது உறுதியானது எனவும், அதன் மூலம் நாட்டை முன்னோக்கி கொண்டுசெல்வதற்கு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொறிஸ் ஜோன்சன் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் மக்களின் நலன்சார்ந்த விடயங்கள் குறித்து கவனம் செலுத்த முடியும் என ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது பிரித்தானியப் பிரதமர் கூறியுள்ளார்.
ஜோன்சனின் ஆரம்பக் கருத்துக்கள் ஒளிப்பதிவு
இதனிடையே இன்று நடைபெற்ற அமைச்சரவை சந்திப்பில் முன் எப்போதும் இல்லாத வகையில் பொறிஸ் ஜோன்சனின் ஆரம்பக் கருத்துக்கள் ஒளிப்பதிவு செய்யப்பட்டு ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
செலவுகளைக் குறைக்குமாறு அமைச்சர்களை வலியுறுத்திய அவர், வரிகளைக் குறைப்பதன் மூலம் அரசாங்கம் பொருளாதார முன்னேற்றத்தை வழங்கும் என கூறியுள்ளார்.
நேற்று சிறப்பான வெற்றியை பெற்றுள்ளதாகவும் இதன்மூலம் புதிய ஆணை கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ள அமைச்சரவை அமைச்சர்கள், தமது ஆதரவையும் பொறிஸ் ஜோன்சனுக்கு தெரிவித்துள்ளனர்.
இதேவேளை முக்கியமான நண்பரை இழக்கவில்லை என்பதில் மகிழ்ச்சி அடைவதாக உக்ரைய்ன் ஜனாதிபதி வெலெடிமீர் ஷெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.