அடுக்குமாடி குடியிருப்பொன்றில் இருந்து தவறி விழுந்து 12 வயது சிறுவன் பலி!
கொழும்பு 09 பகுதியில் அமைந்துள்ள 14 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்றிலிருந்து 12 வயது சிறுவன் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சிறுவன் கொழும்பு 09 பகுதியைச் சேர்ந்தவர் என காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.
முதற்கட்ட விசாரணைகளின்படி, குறித்த சிறுவன் மேலும் சில சிறுவர்களுடன் அந்த அடுக்குமாடிக் கட்டிடத்தின் மொட்டை மாடியில் அமைந்துள்ள நீச்சல் குளப் பகுதியில் இருந்துள்ளார்.
12 வயது சிறுவன் பலி
இதன்போது, எதிர்பாராத விதமாக சிறுவன் கட்டிடத்தின் மேல்பகுதியிலிருந்து கீழே விழுந்ததாக காவல்துறையின் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சிறுவன் கீழே விழுந்தமைக்கான காரணம் மற்றும் சம்பவத்துக்கு முன்னர் அங்கு இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் மேலதிக தகவல்களைத் திரட்டும் நடவடிக்கைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதானை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |