யானையின் தாக்குதலில் பறிபோன சிறுவனின் உயிர் : காலைவேளை துயரம்
தனது தந்தையை பேருந்தில் ஏற்றி விட்டு வருகின்றேன் எனக் கூறிச் சென்ற சிறுவன் யானையின் தாக்குதலினால் உயிரிழந்த சம்பவமொன்று திருகோணமலை(trincomale) மாவட்டத்தில் கோமரங்கடவல காவல்துறை பிரிவில் இடம் பெற்றுள்ளது.
கோமரங்கடவல-விஸ்வபெதிபா சிங்கள வித்தியாலயத்தில் தரம் 03இல் கல்வி பயின்று வரும் குறித்த சிறுவன் தந்தை திருகோணமலையில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றிற்கு வேலைக்காக செல்வதற்கு பேருந்தில் ஏற்றுவதற்காக துவிச்சக்கர வண்டியில் சென்றுள்ளார்.
வயல்வெளியில் மறைந்திருந்த யானை
வீட்டிலிருந்து 100 மீட்டருக்கும் அப்பால் உள்ள வயல் பகுதியில் காலை 6 மணி அளவில் யானை மறைந்திருந்த நிலையில் தாக்குதல் நடாத்திய போது தந்தை தப்பி ஓடிச் சென்ற நிலையில் உயிர் தப்பியுள்ளார். இதேநேரம் 08 வயது மகன் யானையின் பிடியில் மாட்டியுள்ளார்.
இதனையடுத்து யானை சிறுவனை தூக்கி வீசி சிறுவனின் தலையை மிதித்து தலை துண்டிக்கப்பட்டு கீழே விழுந்து கிடந்த நிலையில் பாரிய சத்தத்துடன் யானை கத்தி சத்தமிட்டு சென்றதை அவதானித்ததாகவும் அயலவர்கள் தெரிவித்தனர்.
தலை துண்டிக்கப்பட்ட நிலையில் உயிரிழப்பு
இந்நிலையில் குறித்த இடத்திற்குச் சென்று பார்த்தபோது சிறுவன் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கீழே விழுந்து கிடந்ததாகவும் இதனை அடுத்து கோமரங்கடவல வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகவும் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்த சிறுவன் கோமரங்கடவல -இந்திக்கட்டுவெவ அரோஷ தினால் நிம்சர ராஜபக்ச (08வயது) எனவும் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
தற்போது காட்டு யானைகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் யானையின் தாக்குதலினால் 10க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து உள்ளதாகவும் அப்பகுதியில் உள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனாலும் குறித்த யானையின் தாக்குதல் மற்றும் யானைகளின் தொல்லை அதிகரிப்பு தொடர்பில் கோமரங்கடவல பிரதேசத்துக்கு பொறுப்பான வன இலாகா திணைக்கள அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் கூட யானையின் வருகையை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் யானை மின்வேலிகளை உடைத்துக்கொண்டு கிராமத்துக்குள் வருவதாகவும் யானையை விரட்டும் நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவதாகவும் வன இலாகா அதிகாரிகளின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
