பணிப்புறக்கணிப்பு : இன்று மேலதிக தீர்மானம் எடுக்கப்படும்
இலங்கையில் நேற்று முன்தினம் நள்ளிரவு (11) முதல் தொடருந்து இயக்குநர்கள் முன்னெடுத்துவரும் பணிப்புறக்கணிப்பு தொடர்பில் இன்றைய தினம்(13) கலந்துரையாடி மேலதிக தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் என பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள தொடருந்து இயந்திர சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
5 வருடங்களாக தாமதமாகியுள்ள தரமுயர்வை விரைவுப்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
இந்தநிலையில் இன்றைய தினம் சில காலை நேர தொடருந்து சேவைகள் இடம்பெறவில்லை என தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
30 தொடருந்துகள் சேவையில்
சுமார் 60 தொடருந்து சேவைகள் வழமையாக காலை வேளையில் இடம்பெறுகின்ற போதிலும் இன்று காலை 18 தொடருந்துகளே கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தை வந்தடைந்ததாக தொடருந்து திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் என்.ஜே.இந்திபொல தெரிவித்துள்ளார்.
இதேவேளை 20 தொடருந்து சேவைகள் இடம்பெறாத போதிலும் 30 தொடருந்து சேவைகள் இடம்பெறுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.