இன்று முதல் விலையேற்றப்படும் மற்றுமோர் உணவுப் பொருள்!
நாட்டில் உள்ள அனைத்து வெதுப்பக உணவு உற்பத்திகளின் விலைகளையும் அதிகரிக்க நேரிடும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், இன்று முதல் பாண், பணிஸ் உள்ளிட்ட வெதுப்பக உணவுகளின் அனைத்து விலைகளும் அதிகரிப்பதை தவிர்க்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,
நாட்டில் கொரோனா தொற்று காரணமாக தொழில்வாய்ப்பு பெரும் பிரச்சினையாக இருக்கும் போது அரசாங்கம் எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது. அரசாங்கத்தின் இந்த தவறான நடவடிக்கைகள் காரணமாக சகல பொருட்களின் விலைகளும் அதிகரிக்கும்.
அதுமட்டுமன்றி அரசாங்கம் பாம் ஒயிலை தடை செய்ததால் அதன் விலையும் அதிகரித்தது. ஒரு வருடத்திற்கு முன்னர் 20 லீற்றர் தேங்காய் எண்ணெயின் விலை 4800 ரூபா. தற்போது அதன் விலை 13500 ரூபா. வெதுப்பக உணவுகளில் 30 வீதமான உணவுகள் முச்சக்கரவண்டிகள் மூலம் விநியோகிக்கப்படுகின்றன.
ஆகவே பெட்ரோல் விலை அதிகரிப்பை எப்படி தாங்கி கொள்வது. எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால், வெதுப்பக உரிமையாளர்கள் தமது உணவுகளை தாம் விரும்பிய விலைக்கு அதிகரிப்பார்கள்.
சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டால், வெதுப்பக உணவுகளின் விலைகள் மேலும் அதிகரிக்கும். உப்பு கல் முதல் அனைத்து பொருட்களும் அதிக விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
இவற்றை வெதுப்பக உரிமையாளர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை எனவும் ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.