இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாலம்! தமிழர் பகுதியில் உருவாக்கவுள்ள நேரடி நெடுஞ்சாலை
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாலம் அமைக்கும் திட்டம் குறித்து இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக சிறிலங்காவின் அதிபர் ஆலோசகர் சாகல ரத்நாயக்க இந்தியா செல்லவுள்ளார்.
அதற்கமைய, சாகல ரத்நாயக்க எதிர்வரும் 27ஆம் திகதி புதன்கிழமை டெல்லிக்கு புறப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாட்கள் டெல்லியில் தங்கியிருக்கும் சாகல ரத்நாயக்க அந்நாட்டு தலைவர்களுடன் இருநாடுகளுக்கு இடையிலான பாலத்தை கட்டுவதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளார்.
இராமேஸ்வரம் வரை பாலம்
ரணில் விக்ரமசிங்கவின் அண்மைய இந்திய விஜயத்தின்போது இரு நாடுகளுக்கு இடையில் பாலம் அமைப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளில் இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தது.
இதன் பிரகாரம் இலங்கையின் தலைமன்னாரிலிருந்து, இந்தியாவின் இராமேஸ்வரம் வரையில் இந்த பாலம் அமைக்கப்படவுள்ளது. வாகன போக்குவரத்துக்கு மாத்திரமன்றி, இரு வழி புகையிரத பாதையும் இந்த பாலத்தின் ஊடாக நிர்மானிக்கப்படவுள்ளது.
இதேவேளை, இலங்கைக்கும் இந்தியாவுக்குமான உத்தேச பாலத்தின் ஊடான நில இணைப்பை மையப்படுத்தி, தலைமன்னார் தொடக்கம் திருகோணமலை ஊடாக கொழும்பு வரையிலான விசேட நேரடி நெடுஞ்சாலை போக்குவரத்து கட்டமைப்பும் உருவாக்கப்படவுள்ளது.
தலைமன்னாரிலிருந்து திருகோணமலை
இதன் முதல் கட்டமாக தலைமன்னாரிலிருந்து திருகோணமலை துறைமுகம் வரையிலான வீதி கட்டமைப்பு உருவாக்கப்படவுள்ளது.
இதன் பிரகாரம், இந்தியாவுக்கு இருநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு செல்லும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க, டெல்லியில் உயர் மட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளார்.
இந்த பாலம் ஊடாக இரு நாட்டு பொருளாதார மேம்பாடு மற்றும் மக்கள் தொடர்புகளை வலுப்படுத்த முடியும் என்று இருதரப்பும் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்த பாலத்தை அமைப்பதற்கான பூர்வாங்க ஆய்வு நடவடிக்கைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |