பிக்குகள் என்ன கட்டளைத் தளபதிகளா..!
“என்டா தம்பி கதைக்குறாணுக சந்திவெளியில.. எப்படியடா நேற்றய அடி கதிரவெளியில..” அப்படியெண்டு ஒரு தாயகப்பாடல் ஒரு காலத்தில் அடிக்கடி ஒலிக்க கேட்டிருக்கிறோம்.
அந்தப் பாடல் வெளிவந்த காலப்பகுதி தமிழர் தேசம் வெற்றிப்பெருமிதங்களோடு நிமிர்ந்து நின்ற காலம். ஆனால் அது தலைகீழாய் மாறிப்போக அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பானாம் என்று ஒரு பழமொழி இருக்குதல்லோ!
அதுமாதிரித்தான் அந்தக்காலத்துல நவதுவாரங்களையும் மூடிக்கொண்டு முள்வேலிக்குள் புத்தரை வைத்து பாதுகாத்துக்கொண்டிருந்த பௌத்த பிக்குகளுக்கு இப்போது ஏதோ தாங்கள்தான் சிறிலங்கா இராணுவத்தின் கட்டளைத் தளபதிகள் என்று யாரோ அடிமனதில் ஒரு எண்ணத்தை உருவாகச்செய்திருக்கிறார்கள் போலும்.
சமகால நிலவரங்கள்
பொதுவாக பௌத்த தர்மம் நல்ல எண்ணங்களை எப்போதும் கொண்டிருக்க வேண்டும். ஆசைகளைத்துறந்த பற்று அற்ற வாழ்வொன்றை வாழ வேண்டும். பிற உயிர்களை துன்புறுத்தக்கூடாது - இப்படி நல்ல சிந்தனைகளை சொல்லி நிற்கிறது.
ஆனால் அப்படியான சித்தாத்தரின் போதனைகள் விகாரமடைந்த நிலையில், பௌத்த விகாராதிபதிகளை வந்தடைந்திருக்கிறதா என்ற கேள்வியை நாம் நமக்குள்ளே கேட்டுக்கொள்ளும்படியாக நடந்து முடிகிறது சமகால நிலவரங்கள்.
துறவிகளுக்கு துறக்கவேண்டிய ஆசை தூபமிட்டு வளர்க்கப்படுவதாலோ என்னவோ ஆசைகளைத்துறந்த புத்தனும் தமிழர் நிலங்களில் ஆசைகொண்டவராக மாற்றப்பட்டிருக்கிறார்.
அது எல்லாம் இருக்கட்டும் இந்தப் புத்த துறவுகளிடம் வருவோம் . யார் இவர்கள் ? இவர்களின் வேலை என்ன ? மதகுருக்கள் மதம் பிடித்து அலைவதுண்டா? இப்படி கேள்விகளை கேட்டுக்கொண்டே போகவேண்டும் போலிருக்கிறது. இவர்களின் நடத்தைகளை பார்க்கிறபோது..
சுத்தி வளைக்காமல் விடயத்திற்கு வருவோம். கொழும்பில் ஒரு ஞானசாரர் கிழக்கில் இன்னொரு அம்பிட்டிய இப்படி வந்த பரம்பரையில் இப்போது. குருந்தூர் மலையில் குடியேறிய பிக்குகள்.
ஓம் சத்தமா சொல்லப்படாது இருந்தாலும் சொல்லுறன் குருந்தூர் மலையில் கட்டிடம் கட்டக்கூடாதெண்டு நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னும் இல்லை - இது சிங்கள நாடு என்று வீரசேகர போன்ற விசமிகளோடு சேர்ந்து ஆடிமுடித்திருக்கிறார்கள்.
அதுதான் யாருக்கும் தெரியாமல் நடக்குதென்டு பார்த்தால் நீதிபதி வந்து பார்த்துக்கொண்டிருக்கும்போதே இந்த பம்மாத்துகளை காட்டத்தொடங்கியிருக்கிறார்கள்.
கடைசியில் நீதிபதியின் கடுந்தொணி எச்சரிக்கையோடு கலைந்துபோனது வீரசேகரவின் பிக்குகள் கூட்டம்.
ஏதோ தாங்கள் தான் கட்டளைத் தளபதிகள் என்ற நினைப்பில் இவர்களின் ஆட்டம் கொஞ்சம் எல்லைமீறித்தான் போகிறது. போதாதற்கு இவர்களுக்கு இராணுவ பாதுகாப்பு வேறு.
சொகுசு வாகனங்கள், மாளிகைகளைப் போல வதிவிடம், ஓசிச்சோறு என்று சிங்களம் தீணிபோட்டு வளர்க்க இவர்களும் ஏதோ தாங்கள் தான் எல்லாம் என்று கடல் கடந்து ஜப்பான் வரை போய் எதையெல்லாமோ செய்துதொலைக்கின்றனர்.
என்னத்த சொல்ல, அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பானாம் என கனநாளா கேட்ட கதை இப்பதான் கண்ணுக்கு முன்னால நடக்குது போல!
பாவம் புத்தருக்கு இதெல்லாம் தெரியுமோ என்னமோ..
கட்டளைத் தளபதிகளை துறவிகளாக்கி விட்டாரே..