மொரகஹகந்த நீர்த்தேக்கத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தோட்டாக்கள் கண்டுபிடிப்பு!
மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் அடிப்பகுதியில் இருந்து இன்றும் சுமார் ஆயிரம் தோட்டாக்களை பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்துள்ளனர்.
மூன்றாவது நாளாக இன்றைய தினமும் (13.10.2025) மாத்தளை மாவட்டம் மொரகஹகந்த நீர்த்தேக்கத்தில் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன்போது குறித்த தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விசேட சோதனை நடவடிக்கை
நேற்று முன்தினம் (11.10.2025) மொரகஹகந்த நீர்த்தேக்கத்தில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த கடற்றொழிலாளர் ஒருவர் மூலம், நாவுல காவல் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், மொரகஹகந்த நீர்த்தேக்க விடுதி மையத்திற்குக் கீழே மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது 1,100 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
அதனைத்தொடர்ந்து, விசேட உத்தரவின் பேரில், தம்புள்ள, லக்கல, வில்கமுவ, மஹாவெல, யடவத்த மற்றும் நாவுல காவல்நிலைய அதிகாரிகள், தம்புள்ள விசேட அதிரடிப்படையினர் மற்றும் கடற்றொழில் சமூகத்தினர் நேற்று (12.10.2025) விசேட சோதனை நடவடிக்கையை மேற்கொண்டனர்.
நேற்று (12.10.2025) காலை ஒன்பது மணியளவில், பாதுகாப்புப் படையினரால் சுமார் ஆயிரம் தோட்டாக்களை மீட்க முடிந்தது.
அதன்படி, மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் அடிப்பகுதியில் இருந்து மீட்கப்பட்ட தோட்டாக்களின் எண்ணிக்கை தற்போது இரண்டாயிரத்தை தாண்டியுள்ளது.
இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட தோட்டாக்கள் எவராலும் கைவிடப்பட்டிருக்கலாம் அல்லது மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
பாதுகாப்பு அதிகரிப்பு
இன்று கண்டுபிடிக்கப்பட்ட வெடிமருந்துகளில் T-56 ரக தோட்டாக்கள் மற்றும் Five zero அல்லது விமான எதிர்ப்பு தோட்டாக்கள் காணப்படுவதை பாதுகாப்புப் படையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து குறித்த பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, விசேட சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


