அதானி நிறுவனத்திடமிருந்து மின்சார கொள்வனவிற்கு அமைச்சரவை அங்கீகாரம்
இந்தியாவின் (India) அதானி நிறுவனத்திற்கு (Adani Green Energy Limited) 20 வருடங்களுக்கு மின்சாரத்தைக் கொள்வனவு செய்வதற்கான விலை மனுக்கோரலை வழங்குவதற்கு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekera) சமர்ப்பித்த யோசனைக்கு சிறிலங்கா அமைச்சரவை (Cabinet of Sri Lanka) அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இன்று (7) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தியாவின் அதானி நிறுவனத்தினால் மன்னார் (Mannar) மற்றும் பூநகரி (Pooneryn) பிரதேசத்தில் காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு 2022.03.07 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
கஞ்சன விஜேசேகர சமர்ப்பித்த யோசனை
அதற்கமைய, குறித்த நிறுவனத்தால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கருத்திட்ட முன்மொழிவை மதிப்பீடு செய்வதற்காக அமைச்சரவையால் பேச்சுவார்த்தை உடன்பாட்டுக் குழு நியமிக்கப்பட்டது.
குறித்த குழுவின் விதந்துரைகளின் பிரகாரம் உத்தேசக் கருத்திட்டத்தின் கீழ் உற்பத்தி செய்யப்படும் மின்னலகொன்று கிலோவாற்று மணிக்கு 8.26 சதம் அமெரிக்க டொலர் பெறுமதி (உண்மையான வெளிநாட்டு செலாவணி சரிவிகிதத்திற்கமைய இலங்கை ரூபாவில் செலுத்துவதற்கு) இறுதிக் கட்டணமாக அங்கீகரிப்பதற்கும் 20 வருடங்களுக்கு மின்சாரத்தைக் கொள்வனவு செய்வதற்கான விலை மனுக்கோரலை அதானி நிறுவனத்திற்கு வழங்குவதற்கும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.... |