வாகன உதிரிப்பாகங்களை வரியின்றி இறக்குமதி செய்ய தீர்மானம்!
முதலீட்டுச் சபையின் (BOI) கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ள ஒரு நிறுவனத்திற்கு வாகன உதிரிபாகங்களை வரியின்றி இறக்குமதி செய்வது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தினை சமர்ப்பித்துள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று (27) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போது சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரிஞ்சிகே மேற்கண்டவாறு கூறினார்.
இந்த நடவடிக்கையானது வாகன இறக்குமதிகள் மூலம் ஈட்டப்படும் வரியில் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
வாகன இறக்குமதிக்கு அனுமதி
இதன் வாயிலாக இலங்கையில் வாகனங்களை ஒன்று சேர்ப்பதற்கான விசேட அனுமதிப்பத்திரம் அவர்களுக்கு வழங்கப்படும். அவர்கள் வரியின்றி உதிரிபாகங்களை இறக்குமதி செய்யவும், ஏற்றுமதி செய்யவும் முடியும் என்றும் அவர் குறித்த நிறுவனத்தின் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை, விரைவில் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படுவது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருகிறதாகவும் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
பொது தேவைக்கான வாகனங்கள் இறக்குமதி செய்ய அனுமதி ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டினார்.