நொடிக்கு நொடி நாட்டை அழிக்கும் அரசாங்கம் - உடனடியாக தோற்கடிக்கப்பட வேண்டும்! சஜித் பிரேமதாச காட்டம்
நாட்டை அழித்த இந்த அரசாங்கம் உடனடியாக தோற்கடிக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa)தெரிவித்துள்ளார்.
அதேவேளை, எதிர்க்கட்சிகள் என்று கூறிய வண்ணம் மக்களுக்கு ஆற்ற வேண்டிய சேவையை புறக்கணிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
“ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து மூச்சு”திட்டத்திற்கு இணைவாக ஆரோக்கியமான நாட்டை உருவாக்கும் நோக்கில் 'ஜன சுவய' திட்டத்தின் “சத்காரய” திட்டத்தின் கீழ் 36 ஆவது கட்டமாக, அத்தியாவசிய வைத்தியசாலை உபகரணங்கள் இன்று மன்னார்,செட்டிக்குளம் ஆதார வைத்தியசாலைக்கு அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நொடிக்கு நொடி நாளுக்கு நாள் இந்த அரசாங்கம் நாட்டை அழித்து வருவதாகவும், இந்நிலையிலிருந்து நாட்டைக் கட்டியெழுப்பும் ஆற்றல் ஐக்கிய மக்கள் சக்தியிடமே உள்ளது. அதிகாரம் இல்லாவிட்டாலும் கூட ஐக்கிய மக்கள் சக்தி நாட்டுக்கு குறிப்பிட்ட விதத்தில் பெறுமதி சேர்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
கொரோனா பெருந்தொற்று காரணத்தால் பாதிப்புக்குள்ளாகியுள்ள மக்களுக்கு சுகாதார ரீதியாக நிவாரணங்களை வழங்கும் பொருட்டு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் குழு, அமைப்பாளர்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் வெளிநாட்டுக் கிளைகள், உள்நாட்டு வெளிநாட்டு ஆதரவாளர்கள் "ஜன சுவய" கருத்திட்டத்தில் இணைந்து கொண்டு 'எதிர்க்கட்சியின் மூச்சு" நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றனர்.
இருபத்து நான்கு இலட்சத்து ஐம்பத்து ஏழு ஆயிரம் ரூபா (ரூ.2,457,000) பெறுமதியான Dialysis Machine with Portable RO System இயந்திரம் ஒன்று சஜித் பிரேமதாசவால் அன்பளிப்புச் செய்யப்பட்டது.
இது வரை 35 கட்டங்களில் 1040 இலட்சம் (104,067,000) ரூபா பெறுமதி வாய்ந்த மருத்துவமனை உபகரணங்களை ஐக்கிய மக்கள் சக்தியால் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



