இலங்கையின் நல்லிணக்கம் தொடர்பில் கனடா விடுத்துள்ள கோரிக்கை
அமைதியான, வளமான மற்றும் நல்லிணக்கத்துடனான இலங்கையை காண கனடா(Canada) ஆர்வமாக இருப்பதாக சிறிலங்காவுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷ்(Eric Walsh) தெரிவித்துள்ளார்.
அதேநேரம், பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள இலங்கை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் கனடா ஆதரவளிக்குமெனவும் கனடா தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கனடாவில் மற்றும் இலங்கையில் உள்ள கனேடியர்களுக்கு கனடா தின வாழ்த்து தெரிவித்த சிறிலங்காவுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷ், இரண்டு நாடுகளும் நீண்ட கால நெருங்கிய உறவுகளை கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரச்சனைகளுக்கு தீர்வு
இதன்படி, பெண்களை வலுப்படுத்துவது, காலநிலை தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது, போருக்கு பின்னரான சமாதானத்தை நாட்டில் கட்டியெழுப்புவது உள்ளிட்ட பல விடயங்களில் இலங்கைக்கு தொடர்ந்தும் கனடா ஆதரவு வழங்கி வருவதாக அவர் கூறியுள்ளார்.
இலங்கையின் பொருளாதார மீட்சி தொடர்பான நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம் வறுமையிலுள்ள மக்களுக்கு நிவாரணங்களையும் சலுகைகளையும் வழங்க எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இலங்கைக்கு ஏனைய விதமான ஆதரவுகளை வழங்குவதன் மூலம் அபிவிருத்தி, ஒற்றுமை மற்றும் இலங்கையர்களின் சம உரிமை பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்த கனடா எதிர்ப்பார்த்துள்ளதாக எரிக் வோல்ஷ் தெரிவித்துள்ளார்.
இலங்கை மற்றும் கனடாவுக்கிடையில் நீண்ட கால உறவு காணப்பட்டாலும் கடந்த இரண்டு மாதங்கள் மிக முக்கியமானதாக அமைந்துள்ளதெனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |