ரவி கருணாநாயக்க - அர்ஜுன் அலோசியஸ் மீதான வழக்கு ஒத்திவைப்பு
முன்னாள் நிதி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க (Ravi Karunanayake) மற்றும் பெர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் (Arjun Aloysius) ஆகியோருக்கு எதிரான வழக்கை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் (CIABOC) தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த வழக்கை, மேலதிக சாட்சி விசாரணைக்காக ஜனவரி 16 ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு இன்று (12) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது முறைப்பாட்டாளர் தரப்பு சாட்சிகளைப் பதிவு செய்யும் நடவடிக்கை இடம்பெற்றது.
நீதிபதி உத்தரவு
அதனைத் தொடர்ந்து மேலதிக சாட்சி விசாரணையை ஜனவரி 16ஆம் திகதி வரை ஒத்திவைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி முதல் அதேவருடம் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் நிதியமைச்சராகப் பணியாற்றிய பிரதிவாதியான ரவி கருணாநாயக்க, இவ்வழக்கின் இரண்டாம் பிரதிவாதியான அர்ஜுன் அலோசியஸ் பணிப்பாளராகச் செயற்படும் தனியார் நிறுவனத்தின் பெயரில் பெறப்பட்டிருந்த குடியிருப்புத் தொகுதியிலுள்ள வீடொன்றில் வசித்ததன் மூலம், இலஞ்சச் சட்டத்தின் 19 (இ) பிரிவின் கீழ் குற்றமொன்றைப் புரிந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டி, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
அந்தச் செயற்பாட்டிற்கு உடந்தையாக இருந்தமை தொடர்பில், இரண்டாம் பிரதிவாதியான பெர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளரான அர்ஜுன் அலோசியஸுற்கு எதிராக அந்த ஆணைக்குழுவினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |