தமிழீழ விடுதலை இயக்கத்தின் நிர்வாகத் தெரிவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
தமிழீழ விடுதலை இயக்கத்தின் திருகோணமலை மாவட்ட நிர்வாக சபைத் தெரிவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கு விசாரணைக்கு வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் தலைமைக் குழு உறுப்பினருமான வினோ நோகராதலிங்கம் மற்றும் கட்சியின் திருகோணமலை மாவட்ட உறுப்பினர்கள் நீதிமன்றில் முன்னிலையாகினர்.
இந்நிலையில், வழக்கை தாக்கல் செய்த தரப்பினர் இன்று நீதிமன்றில் முன்னிலையாகாத காரணத்தால், வழக்கு எதிர்வரும் மாதம் 16ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
வினோ நோகராதலிங்கம்
விசாரணைக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வினோ நோகராதலிங்கம் , தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைமைக்கு எதிராக திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த இரு கட்சி உறுப்பினர்கள் ஊடாக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கட்சியின் 12ஆவது தேசிய மாநாட்டை குழப்பும் நோக்கத்திலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கலாம் எனவும் அவர் குற்றஞ்சாட்டினார். க
கட்சியின் தேசிய மாநாட்டை முன்னிட்டு ஏனைய மாவட்டங்களில் பொதுக்குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ள நிலையில், திருகோணமலை மாவட்டத்தில் மட்டும் தெரிவுசெய்யப்பட்ட நிர்வாகக் குழுவை செல்லுபடியாகாது என சவாலுக்கு உட்படுத்துவது திட்டமிட்ட செயல் என அவர் தெரிவித்தார்.
கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்கள் பங்கேற்ற நிர்வாகத் தெரிவில் 17 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டதாகவும், அப்போது எந்தவித எதிர்ப்பும் முன்வைக்கப்படாத நிலையில் தற்போது நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, கட்சியில் புதிய மாற்றங்கள் வர வேண்டும் என பொதுஉறுப்பினர்கள் விரும்புகின்ற போதிலும், சில உயர்மட்ட பதவிகளில் இருப்பவர்கள் அதற்கு இடையூறு விளைவிப்பதாகவும், தங்களது பதவிகளை தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் வினோ நோகராதலிங்கம் கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |