யாழில் நூற்றுக்கணக்கானவர்களுக்கு கண்புரை அறுவை சிகிச்சை
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண் சிகிச்சைப் பிரிவினால் வெசாக் தினைத்தினை முன்னிட்டு 28, 29 மற்றும் 30 ஆகிய தினங்களில் விசேட கண்புரை அறுவைச் சிகிச்சை நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் பிரதான நோக்கம் அனுராதபுரம் (பதவியா மற்றும் ஹொரோவபொத்தானை), வவுனியா மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களைச் சேர்ந்த நோயாளர்களுக்கு கண்புரை அறுவைச் சிகிச்சை சேவைகளை வழங்குவதன் மூலம் தவிர்க்கக்கூடிய பார்வையிழப்பைத் தடுப்பதோடு, பின்தங்கிய சமூகங்களுக்கு தரமான கண் சுகாதார சேவைகளின் அணுகலை மேம்படுத்துவதாகும்.
அறுவைச் சிகிச்சையின் போது, யாழ்.போதனா வைத்தியசாலை, கண் மருத்துவ நிபுணர் வைத்தியர் எம். மலரவன், கண் அறுவைச் சிகிச்சை நிபுணர் மற்றும் வெளிக்கண் நோய் நிபுணர் வைத்தியர் எஸ். சுஜீவன், சிரேஷ்ட மருத்துவ அதிகாரி வைத்தியர் ரி. திலீபன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
312 கண்புரை அறுவைச் சிகிச்சைகள்
இந்நிகழ்ச்சி ஐக்கிய இராச்சியம் (UK) மற்றும் இலங்கையைத் தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனம் ஒன்றில் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்பட்டது.

மூன்று நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 312 கண்புரை அறுவைச் சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன.
அவற்றில் 215 நோயாளர்கள் (68.9%) வெளி மாவட்டங்களிலிருந்து பங்கேற்றிருந்தனர். இத்திட்டம் பொதுமக்களுக்கான கண் சுகாதார சேவைகளில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்ததுடன், பார்வையை மீட்டெடுத்து கண்புரை நோயாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் முன்மாதிரி வெளிச்சேவைத் திட்டமாகவும் திகழ்கிறது.
ஒருங்கிணைக்கப்பட்ட வெளிச்சேவை அணுகுமுறையின் மூலம் பின்தங்கிய சமூகங்களுக்கு அதிகளவிலான கண்புரை அறுவைச் சிகிச்சை சேவைகள் வழங்கப்பட்டதன் மூலம், இத்திட்டம் பார்வையை மீட்டெடுத்து, வாழ்க்கைத் தரத்தையும் உற்பத்தித்திறனையும் மேம்படுத்தி, சமூக உள்ளடக்கத்தை ஊக்குவித்ததுடன், மாவட்டங்களுக்கிடையேயான ஒத்துழைப்பையும் வலுப்படுத்துகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |