சிறைத்தண்டனைக்கு எதிராக சமிந்த விஜேசிறி எம்.பி மனுத் தாக்கல்!
தனக்கு விதிக்கப்பட்ட ஒன்றரை வருட சிறைத்தண்டனையை இரத்து செய்து, தம்மை விடுதலை செய்யுமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி பதுளை மேல் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அத்துடன், குறித்த மேன்முறையீட்டு மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்குமாறும், மனு மீதான விசாரணை முடிவடையும் வரை தமக்கு பிணை வழங்குமாறும் அவர் தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவினர் சமிந்த விஜேசிறி சார்பாக இந்த மேன்முறையீட்டு மனுவைப் பதுளை மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை
காவல்துறை உத்தியோகத்தர்களை சட்டவிரோதமாக வழிமறித்தல், இரு காவல்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தி காயப்படுத்துதல் மற்றும் கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளில் சமிந்த விஜேசிறி குற்றவாளியாகக் காணப்பட்டு, அவருக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து பதுளை மேல் நீதிமன்றம் நேற்று (28) தீர்ப்பளித்தது.

2019 ஆம் ஆண்டு பண்டாரவளைப் பகுதியில் சமிந்த விஜேசிறியின் வாகனத்தை சுற்றிவளைப்பு நடவடிக்கைக்குச் சென்ற காவல்துறை ஜீப் வண்டி ஒன்று முந்திச் சென்றதைத் தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதமே இத்தாக்குதல் மற்றும் மிரட்டல் சம்பவத்திற்குக் காரணம் என தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |