துப்பாக்கியுடன் சரணடைந்த சம்பிக்க ரணவக்க! பொலிஸார் எடுத்துள்ள நடவடிக்கை
அனுமதிப் பத்திரம் இன்றி சட்டவிரோத கைத்துப்பாக்கி பயன்படுத்தியதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது குறித்து நடவடிக்கை எடுக்க தலங்கம பொலிஸார் சட்ட மா அதிபரிடம் ஆலோசனை கோரியுள்ளனர். 2009ஆம் ஆண்டு சம்பிக்க ரணவக்க துப்பாக்கியை பயன்படுத்தியதாகவும் அமைச்சின் மேலதிக செயலாளர் ஒருவர் அதற்கு ஒரு வருடத்திற்கான அனுமதிப் பத்திரம் வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் சம்பிக்க ரணவக்க குறித்த துப்பாக்கியை 2019ஆம் ஆண்டு வரை பயன்படுத்தியுள்ளதாக தெரியவருகிறது.
2019ஆம் ஆண்டு நடுப்பகுதியில் அந்த துப்பாக்கியை பயன்படுத்த சம்பிக்க ரணவக்க தலங்கம பொலிஸாரிடம் அனுமதி கோரிய போதும் அது கிடைக்கவில்லை.
அதன்பின் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சம்பிக்க ரணவக்க தனது துப்பாக்கியை தலங்கம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
இராணுவ ஆயுத களஞ்சியத்தில் இருந்து குறித்த துப்பாக்கியை சம்பிக்க ரணவக்க 2000 ரூபா செலவில் கொள்வனவு செய்துள்ளதாக தெரியவருகிறது.
இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சில் வினவியபோது குறித்த துப்பாக்கி தொடர்பான எவ்வித ஆவணங்களும் தங்களிடம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.