பயத்தில் இராஜாங்க அமைச்சர் -காரணம் யாதோ...!
அமைச்சுப்பதவி என்ற பெயரைப் பயன்படுத்தி மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெறுவதாக அண்மைக்காலமாக குற்றச்சாட்டுக்கள் பல்வேறு தரப்பினராலும் தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகின்றன.
குறிப்பாக மண் அகழ்வு,காணி பிடிப்பு, அச்சுறுத்தல் என்பன இந்த பதவியை வைத்தே மேற்கொள்ளப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் பலராலும் முன்வைக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தரும் தென்பகுதி அமைச்சர்களிடம் எவ்வித தயக்கமும் இன்றி மாவட்ட ஊடகவியலாளர்கள் துணிகரமாக கேள்வி எழுப்புவது அந்த மாவட்டத்தில் உள்ள இராஜாங்க அமைச்சர் ஒருவருக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு காரணம் இல்லாமலும் இல்லை. தனது சட்டவிரோத செயற்பாடுகளையும் ஊடகவியலாளர்கள், பலரின் முன் துகிலுரித்து விடுவார்களோ என்ற அச்சம் தான்.
இதனால் தான் அரசாங்க தகவல் திணைக்களம் வழங்கியுள்ள அடையாள அட்டையை வைத்திருக்கும் ஊடகவியலாளர்களுக்கே மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டங்களில் கலந்து கொள்ள அனுமதி வழங்குமாறு கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளாராம் அவர்.
இலங்கையில் எந்த ஒரு இடத்திலும் இல்லாத புதிய ஒரு நடைமுறையை அபிவிருத்தி குழு தலைவர் செயல்படுத்த நினைப்பது அடி முட்டாள் தனம் என்றும் இவ்வாறு ஊடகவியலாளர்களுக்கு அஞ்சி செயற்படுவதை விட அபிவிருத்தி குழுதலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு அதற்கு உகந்தவர்களை நியமிக்க வேண்டும் என்றும் அந்த மாவட்டத்தைச் சேர்ந்த பலரும் தெரிவித்துவருகின்றனர்.
அத்துடன் ஆளுமையற்ற அபிவிருத்தி குழு தலைவர்களால் ஒட்டுமொத்த மாவட்டமே படுகுழியில் செல்லும் நிலை தான் காணப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
அமைச்சுப்ப தவியை வைத்துக் கொண்டு தனது அராஜக அரசியல் செயற்பாட்டை மேற்கொண்டு அச்சுறுத்தும் அவரது அரசியல் எத்தனை காலத்திற்கு தான் எடுபட போகிறது எனவும் அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.