அரசியலமைப்பில் மேலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் - மைத்திரி வெளியிட்ட தகவல்
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படாமையினால் அதில் மேலும் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் என சிறிலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் அதிபருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கண்டி சிறி தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மைத்திரிபால சிறிசேன, 19 ஆவது திருத்தத்தில் இருந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்து அதில் சில மாற்றங்களை மேற்கொண்டு அதனை அங்கீகரிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “இலங்கை தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு ஜாதி, மதம் பாராமல் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.
அண்மையில் சிறிலங்கா சுதந்திர கட்சியின் சில உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டுள்ளனர்.
எதிர்காலத்தில் கட்சியின் ஏனைய உறுப்பினர்களும் இவ்வாறு செல்வார்களா என்பது குறித்து தமக்கு எந்தவொரு உறுதிப்பாடும் இல்லை.
ரணிலுக்கான ஆதரவு
எனினும், மக்கள் நலன் கருதி அதிபர் ரணில் விக்ரமசிங்கவும் அவரது அரசாங்கமும் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு சிறிலங்கா சுதந்திர கட்சி தமது ஆதரவை வழங்கும்.
இலங்கையில் சர்வ கட்சி அரசாங்கத்தை உருவாக்குவதன் மூலம் சர்வதேச அமைப்புக்களின் உதவிகளை இலகுவாகப் பெற்றுக் கொள்ளலாம்.
அரசாங்கத்தில் இருக்கும் சிலரின் சொந்த விருப்பு வெறுப்புக்கள் காரணமாக அது அமைக்கப்படவில்லை”என்றார்.
