வடக்கு சுகாதாரத்துறையில் சீர்கேடுகள் : அம்பலப்படுத்திய வைத்தியர் அர்ச்சுனா
வைத்தியத்துறையில் எல்லா இடங்களிலும் பிரச்சினைகள் மலிந்து போய்க் கிடக்கின்றது. அதில் வடக்கு மாகாணத்திலும் மலிந்து போய் இருக்கின்றது என்பது நிதர்சனமான உண்மை. அதில் மாற்றுக்கருத்துக்கள் கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் (Suresh Premachandran) தெரிவித்துள்ளார்.
அர்ச்சுனா இராமநாதன் (Archchuna Ramanathan) சில விடயங்களை ஆராய்ந்து வெளியிட்டதன் காரணமாக அது இன்று பிரபல்யமடைந்திருக்கின்றது. இரகசியங்களை மற்றும் ஊழல்களை வெளிக்கொண்டு வந்ததற்கு அவருக்கு நாங்கள் நன்றி சொல்ல வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்று (20) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அர்ச்சுனா முன்வைத்த குற்றச்சாட்டுகள்
இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர் “இலங்கையில் சுகாதாரத்துறை எவ்வளவு சீர்கெட்டு இருக்கின்றது என்பதற்கு மிக மிக உச்சத்தில் இருக்கக் கூடிய சுகாதார அமைச்சரே சிறைச்சாலையில் தான் இருக்கின்றார் என்பது போதுமான உதாரணமாகும்
கடந்த சில நாட்களாக வடக்கு மாகாணத்தினுடைய சுகாதார துறை சம்பந்தமாக பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படடது. சாவகச்சேரி வைத்தியசாலையில் புதிதாக நியமனம் பெற்ற வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் பல குற்றச்சாட்டுக்களை வெளியிட்டார்.
அதன்படி அங்கு ஊழல் மலிந்து கிடக்கின்றது, மருந்து வகைகள் உரிய முறையில் பாதுகாக்கப்படவில்லை, மருந்துகள் வெளியில் கொண்டு செல்லப்படுகின்றன, அங்கு வருகின்ற நோயாளிகள் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படல், மற்றும் நோயாளிகள் அநாவசியமாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்படுதல் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருக்கின்றது.
இலங்கையில் உள்ள அரச நிறுவனங்களான சுகாதாரத்துறை அல்லது வேறு துறைகளும் சுத்தமாக சீரழிவுகளின்றி இயங்குவதில்லை.
வைத்தியர்கள் வெளியேற்றம்
குறிப்பாக சுகாதாரத்துறையை எடுத்தால் மக்களுக்கு உதவாத தவறான மருந்துகளை வெளிநாடுகளில் இருந்து குறைந்த விலையில் இறக்குமதி செய்து நிறைய பணத்தை கையாடிய குற்றச்சாட்டில் கெஹெலிய ரம்புக்வெல (Keheliya Rambukwella) இன்றும் சிறையில் இருக்கின்றார்.
ஏறத்தாழ 2000 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்கள். வைத்தியத் துறைக்கு சம்பள உயர்வு இல்லை என்ற காரணத்தினால் உயர்ந்த தகுதியில் இருந்த வைத்தியர்கள் வெளியேறியுள்ளனர்.
கடந்த 2 வருடங்களாக வைத்தியசாலைகளில் போதுமான வைத்தியர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டுகள் வைத்தியத் துறையினால் முன்வைக்கப்பட்டு வருகின்றது.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை போன்ற மாகாண சபைக்கு கட்டுப்பட்டுள்ள வைத்தியசாலைக்கு உரிய நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் குறித்து ஆளுநர், மாகாண செயலாளர் மற்றும் மாகாண இயக்குநர் பலபேர் இருக்கின்ற போது நியமனங்கள் இவர்களுக்கு ஊடாக செல்வதே சரியானது.
மாகாண அதிகாரம்
ஆனால் இங்கே மாகாண இயக்குநர் ஒரு விடயத்தைச் சொன்னால் அதனை ஏற்றுக்கொள்வதற்கு தயாராக இல்லாத சூழ்நிலையும் கொழும்பில் இருந்து தான் எனக்கு நியமனம் கிடைத்தது ஆகவே அங்கிருந்து சொன்னால் மாத்திரம் தான் நான் ஏற்றுக்கொள்வேன் என கூறுவது போன்ற விடயங்கள் இந்த நிர்வாகத்தை சீர்குலைக்கக் கூடிய விடயங்களாக இருக்கின்றது.
நாங்கள் இவ்வளவு காலம் போராடி இலட்சக்கணக்கான மக்களைப் பலி கொடுத்து எங்களுக்கு கிடைத்த மாகாண அதிகாரத்தை அதிகாரிகள் புறக்கணிப்பது பிழையான விடயமாகும்.
ஆனால் இந்த நியமனங்கள் கொழும்பில் இருந்து வழங்கப்படுவது தவறானது என்பதை நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்ட வேண்டிய தேவை இருக்கின்றது.“ என தெரிவித்துள்ளார்.
மக்களுக்காக மருத்துவ துறையில் புரட்சிக்கு வித்திட்ட வைத்தியர் அர்ச்சுனா : தலை வணங்கும் ஈழத் தமிழ் பெண்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |