“சீன அமைச்சருடன் கணவன் - மனைவி போல் புகைப்படம்” மகிந்தவுக்கு எதிராக குற்றச்சாட்டு
சீன வெளிவிவகார அமைச்சரும் பிரதமர் மகிந்த ராஜபக்சவும் கைக்குள் கைபோட்டு கணவன் மனைவிபோல புகைப்படத்தினை வெளியிட்டுள்ளனர். இது அவர்கள் அந்நாட்டின் அடிமைகளாக மாறிவிட்டமையை புலப்படுத்துவதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
நேற்று மட்டக்களப்பு நொச்சிமுனை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர் இவ்வாறு கூறினார். இதன்போது மேலும் பேசிய அவர்,
“இலங்கை அரசாங்கமானது தனது மோசமான தீர்மானத்தின் ஊடாக அண்மையில் சீன நிறுவனம் ஒன்றுக்கு 690 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தியுள்ளது.
விவசாய அமைச்சின் தவறான தீர்மானத்தின் காரணமாக சீனாவில் கழிவுப்பொருட்களாக ஒதுக்கப்பட்ட, இலங்கையில் விவசாயிகள் பயன்படுத்தமுடியாத உரங்களை இறக்குமதி செய்தபோது அதனை இந்த நாட்டில் பயன்படுத்தமுடியாது என நீதிமன்றம் கட்டளையிட்டதன் பிறகு சீனா இலங்கையில் உள்ள ஒரு வங்கியை தடைசெய்தது.
அதனை தொடர்ந்து 690 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்டது. இலங்கையின் பணத்தில் 130கோடி ரூபாவுக்கு மேலாக தண்டப்பணமாக கட்டப்பட்டுள்ளது.
மகிந்த ராஜபக்சவின் குடும்ப தோட்டத்தில் தேங்காய் பறித்து விற்றோ, பசில் ராஜபக்ச விவசாயம் செய்து உழைத்த பணமோ இல்லை. இந்த நாட்டின் மக்கள் செலுத்திய வரிப்பணமே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளது.
மக்களது வரிப்பணத்தினையெடுத்து வேறு ஒரு நாட்டில் தேவையற்ற செலவினை செய்துவிட்டு இந்த நாட்டு மக்களை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளியுள்ளனர்” என்றார்.